பெங்களூரு: நாடு முழுவதுமே வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. மகா சிவராத்திரி இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான பெருவிழா ஆகும்.
மற்ற நாட்களை போல இல்லாமல் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். பல்வேறு மாநிலங்களிலும் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு சிவராத்திரி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

இந்த நிலையில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் சிவராத்திரி நாளான பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதித்திருக்கிறது. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்ய கூடாது என அறிவித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமே இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி சிவராத்திரி ஆன பிப்ரவரி 15ஆம் தேதி அன்று பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் விலங்குகள் கொல்லப்படுவதும், இறைச்சிய விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரு மாநகராட்சியின் கால்நடை பராமரிப்பு துறையால் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த உத்தரவின் படி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து இறைச்சி கூடங்கள் மற்றும் சில்லறை இறைச்சி விற்பனை நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்.

சிக்கன், மட்டன் மற்றும் மீன் விற்பனை கடைகள் 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூரு எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அனைத்து இறைச்சி விற்பனை கடைகளுக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி விற்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய நகரின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் கொண்டு கண்காணிக்கப்படும் என்றும் தடையை மீறி விலங்குகளை கொல்பவர்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமாகவே பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் கலாச்சார ரீதியிலான உணர்வுகளை அங்கீகரிக்கும் வகையில் இது போன்ற நாட்களில் இறைச்சி விற்பனை தடையை விதித்து வருகிறது. இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு ஜனவரி 30 ஆம் தேதி அன்று சர்வோதய தினம் கொண்டாடப்பட்டது அப்போதும் கூட பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இதே போன்ற இறைச்சி விற்பனை தடையை விதித்தது.


Click it and Unblock the Notifications