பெங்களூருவில் சிறிய மனைகளில் வீடு கட்ட விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, கட்டிடப் பின்னடைவு (Setback) விதிகளை எளிமைப்படுத்தி, விதிகளில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (UDD) புதிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. திருத்தப்பட்ட முதன்மைத் திட்டம் 2015-இன் கீழ் உள்ள மண்டல விதிமுறைகளை திருத்துவதற்கான வரைவு அறிவிக்கை நவம்பர் 11ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துப் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை அடுத்த 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட பின்னடைவு என்றால் என்ன..?: கட்டிடப் பின்னடைவு என்பது, ஒரு வீட்டைச் சுற்றியுள்ள காலியிடத்தை குறிக்கும். இந்தக் காலியிடம், போதுமான காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் பாதுகாப்பிற்காக கட்டாயம் விடப்பட வேண்டும். முன்பு, வீடு கட்டுபவர்கள் இந்தத் திறந்தவெளியை மனையின் மொத்த அளவு (நீளம், அகலம்) ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் (முன்புறம் 12%, பின்புறம் 8% என) கணக்கிட வேண்டியிருந்தது. இந்த சதவீத கணக்கீடு வீடு கட்டுவோருக்கும் அதிகாரிகளுக்கும் பல நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த குழப்பத்தை தவிர்க்கும் விதமாக, 150 சதுர மீட்டர் (சுமார் 1,600 சதுர அடி) வரை உள்ள சிறிய மனைகளுக்கு இப்போது நிலையான தூரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, இவ்வளவு தூரம் காலியிடம் விட வேண்டும் என்று துல்லியமாக மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய மனைகள் (சுமார் 20x30 அடி அல்லது 60 சதுர மீட்டர் வரை): வீட்டின் முன்புறம் 0.7 மீட்டர் (சுமார் 2.3 அடி) மற்றும் மற்ற மூன்று பக்கங்களிலும் 0.6 மீட்டர் (சுமார் 2 அடி) காலியிடம் விட வேண்டும்.
பெரிய மனைகள் (சுமார் 30x40 அடி முதல் 30x50 அடி வரை அல்லது 60 முதல் 150 சதுர மீட்டருக்குள்): முன்புறம் 0.9 மீட்டர் (சுமார் 3 அடி), பின்பக்கத்திலும் பக்கவாட்டிலும் 0.7 மீட்டர் (சுமார் 2.3 அடி) காலியிடம் விட வேண்டும்.
அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த புதிய முறை சிறிய மனைகளில் வீடு கட்டும் பணியை மிகவும் எளிமையாக்கும். மேலும், 150 சதுர மீட்டர் வரையிலான மனைகளில், அடித்தளத்தை தவிர்த்து, அதிகபட்சமாக 12 மீட்டர் உயரம் வரை வீடு கட்டலாம்.
பார்க்கிங் மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் : அதேபோல், 750 சதுர மீட்டர் வரையிலான மனைகளில், வெளிப்படையாக இருக்கும் படிக்கட்டுகளை பின்னடைவுப் பகுதிக்குள் அமைக்க இப்போது அனுமதி உண்டு. ஆனால், அந்தப் பின்னடைவு இடம் சிமெண்ட்டால் மூடப்படாமல், மழைநீர் பூமிக்குள் செல்ல ஏதுவாக காலியாக இருக்க வேண்டும். மேலும், கட்டிடங்களின் அடித்தளங்கள் அல்லது மேல் தளங்களில் லிஃப்ட் போன்ற இயந்திரங்கள் மூலம் செயல்படும் பார்க்கிங் வசதிகளை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளம் வரக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் அடித்தளம் அமைப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications