பெங்களூர்: இந்தியாவின் ஐடி நகரமாக விளங்கும் பெங்களூரில் இருக்கும் மக்கள் வருடத்தின் 365 நாளும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் டிராபிக். ஒட்டுமொத்த இந்தியாவும் பெங்களூர் டிராபிக் பிரச்சனை குறித்து நன்கு அறியும் நிலையில், இதைச் சரி செய்யப் பல முயற்சிகளை கர்நாடக அரசும், பெங்களூர் நிர்வாகமும் எடுத்து வருகிறது.
இதில் முக்கியமான ஒன்று தான் மெட்ரோ திட்டம், மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட அனைத்து நகரங்களுக்கும் மெட்ரோ திட்டம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், பெங்களூரில் நீண்ட தாமதத்திற்குப் பின்பு தான் முக்கியமான பகுதிகளுக்கு மெட்ரோ திட்டம் வர துவங்கியுள்ளது.

அந்த வகையில் பெங்களூர் மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சென்ட்ரல் சில்க் போர்டு டூ பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் தான் அடுத்து மெட்ரோ சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் பின்பு நகரின் பிற முக்கிய வழித்தடத்திலும் மெட்ரோ சேவை விரைவாகத் துவங்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இது அனைத்தும் தற்போது பொய்த்துள்ளது.
பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் எப்படா மெட்ரோ வரும் என காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி சோகமானதாகத் தான் இருக்கப்போகிறது. பெங்களூரில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ சேவை செயல்பாட்டிற்கு வருவது தாமதமாகும்.
இந்த ஆண்டு டிசம்பரில் 19 கிமீ நீளமுள்ள சென்ட்ரல் சில்க் போர்டு டூ பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ சேவை தொடங்க திட்டமிட்டிருந்த BMRCL, 2025 ஆரம்பம் வரையில் தாமதமாகும் என தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) நிறுவனம் தான்.
டிட்டாகர் ரயில் நிறுவனம், பெங்களூர் மெட்ரோ திட்டத்திற்கு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. மெட்ரோ வழித்தடத்திற்கான கட்டுமானம் முடித்து ரயில் சேவை துவங்க தயாராக இருக்கும் வேளையில், டிட்டாகர் நிறுவனத்தின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தாமதமாகி வருவதால் டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் சேவை 2025 முதல் காலாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் டிட்டாகர் மூலம் முதல் ரயில் செட்-ஐ BMRCL பெற எதிர்பார்த்திருந்தது, ஆனால் ரயில் பெட்டிகள் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான பிரச்சனைகளால் அது நடக்கவில்லை. இதன் அடிப்படையில் தான் டிசம்பர் மாதம் சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டிட்டாகர்-ன் முதல் ரயில் செட் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் வர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சேவை துவங்க 2025 ஜனவரி - பிப்ரவரி வரையில் நேரம் தேவைப்படும் என கூறப்படுகிறது. சென்ட்ரல் சில்க் போர்டு டூ பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ சேவை தொடங்க குறைந்தது 7-8 ரயில் பெட்டிகள் தேவை என மெட்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை, பெங்களூரு மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன் மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கேஆர் புராவிலிருந்து மெஜஸ்டிக் வரை மெட்ரோ பயணம் மேற்கொண்டு பயணிகளுடன் தொடர்புகொண்டனர். இப்போது பல பயணிகள் Purple Lineல் கூடுதல் லூப் ரயில்கள் தேவை எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications