பெங்களூரு: இந்தியாவின் ஐடி தலைநகரமாக பெங்களூரு கருதப்படுகிறது. முன்னணி ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் அனைத்தும் பெங்களூருவில் செயல்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் ஐடி துறை சார்ந்த வேலைகளுக்கு பெங்களூருக்கு பயணம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஐடி துறையில் சற்றே மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாகவும் பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்து இருக்கின்றன. எனவே பெங்களூரில் ஐடி துறை சார்ந்து செயல்படக்கூடிய மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெங்களூரில் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் வந்து தங்குவதற்காகவே பல்வேறு தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன. இந்த தங்கும் விடுதிகளுக்கான தேவை தற்போது பெருமளவில் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெங்களூரில் வீடுகளின் விற்பனையும் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஐடி நிறுவனங்கள் பெருமளவில் இருக்கக்கூடிய அவுட்டர் ரிங் சாலையை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல்வேறு வீடுகளும் வாடகைக்கு ஆட்கள் கிடைக்காமல் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பகுதிகளில் தங்கும் விடுதிகளிலும் தற்போது பல்வேறு அறைகள் காலியாக இருக்கின்றனவாம். இதனால் தற்போது வீடு வாங்கி வாடகை வருமானம் பார்க்கலாம் என எதிர்பார்த்தவர்களும், தங்கும் விடுதிகளை நடத்துபவர்களும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.
பெங்களூரில் ஐடி வேலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குவார்கள் இல்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குவார்கள். எனவே பெங்களூருவில் இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என சொல்லப்படுவது உண்டு. ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் எல்லாம் மூன்று படுக்கை அறை கொண்ட வீட்டில் ஒரு படுக்கை அறையை வாடகைக்கு எடுக்க 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.
ஆனால் தற்போது இந்த வீடுகள் எல்லாம் காலியாக இருக்கின்றன. ஊழியர்கள் நேரடியாக அலுவலகம் வந்து தான் பணிபுரிய வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வரவழைத்தன ஐடி நிறுவனங்கள். இதனால் பெங்களூரில் வீடு வாடகைக்கு விடுபவர்களும் தங்கும் விடுதிகளை நடத்துபவர்களும் சந்தோஷப்பட்டனர். ஆனால் இவ்வாறு ஊழியர்களை வரவழைத்து சில மாதங்களிலேயே பணி நீக்கம் செய்து விட்டன.
இதனால் பெங்களூருவில் வாடகை சந்தை என்பது பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆம் கடந்த ஆண்டில் மட்டும் 87 டெக் நிறுவனங்கள் 23 ,504 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கின்றன. அதேபோல ஐடி நிறுவனங்களை சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் இந்த பணி நீக்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே பெங்களூருவில் வீட்டு வாடகை வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் அல்லது தங்குமிடங்களை தொடங்கலாம் என எண்ணுபவர்கள் அதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது என யோசனை தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications