பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு பெங்களூரு மாநகராட்சி கொண்டு வந்த ஜல்மித்ரா திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூர் நகரம் தத்தளித்து வருகிறது. வரும் காலங்களில் இந்த பிரச்னை இருக்க கூடாது என்ற நோக்கில் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு பெங்களூரு குடிநீர் விநியோக வாரியம் ஜல்மித்ரா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.

கடந்த 30 நாட்களில் மட்டும் இந்த திட்டத்தில் 9,000 பேர் பதிவு செய்திருப்பதாக பெங்களூரு குடிநீர் விநியோக வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.
"தண்ணீரில் தன்னிறைவு அடைந்த பெங்களூரு"என்ற ஒரு திட்டத்தை பெங்களூரு மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதற்காக கடந்த மார்ச் 14ஆம் தேதி பெங்களூரு மாநகராட்சி சார்பில் சேவ் வாட்டர் குரோ பெங்களூர்(save water - grow Bengaluru) என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இதில் தண்ணீரை சேமிக்கும் மக்களுக்கு ஜல்மித்ரா என்ற பெயர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 9 ஆயிரம் பேர் தங்களை ஜல்மித்ராக்களாக பதிவு செய்துள்ளனர் என பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பு இன்றி எந்த ஒரு அரசு திட்டமும் வெற்றியடைய முடியாது அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்குள் பெங்களூரு மாநகரம் தண்ணீரில் தன்னிறைவடைந்த மாநகரமாக மாற வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருவதாக மனோகர் கூறியுள்ளார். தண்ணீரை சேமிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஜல்மித்ராக்கள் ஈடுபட உள்ளனர்.
தண்ணீரை வீணாக்காமல் எப்படி பயன்படுத்துவது? மழைநீர் சேகரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது?, எந்தெந்த வழிகளில் எல்லாம் தண்ணீரை சேமிக்கலாம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வுகள் இந்த திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.
மழைநீர் சேகரிப்புக்கு தேவையான கட்டமைப்புகளை மக்கள் அவர்களின் குடியிருப்புகளில் ஏற்படுத்த தேவையான உதவிகளை மாநகராட்சி வழங்க இருக்கிறது. இந்த பணிகளில் பெங்களூர் குடிநீர் வாரியம், மாநகராட்சிக்கு மற்றும் பொது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக ஜல்மித்ராக்கள் செயல்பட இருக்கின்றனர்.
பெங்களூரு நகரில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவி வருகிறது. கிணறுகள் வறண்டு போனதே இதற்கு காரணம். தண்ணீர் பிரச்னை காரணமாக மக்கள் தவிப்பது ஒரு புறம் என்றால், நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வேறு நகரங்களுக்கு இடம்பெயரும் சூழல் உருவாகிவிட்டது. எனவே தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications