பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கையில் எடுத்திருப்பதால் வாடகை வீடுகளுக்கான தேவை குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி தேவை குறைந்திருந்தாலும் பெங்களூருவை சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை குறைப்பதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அது மட்டும் இன்றி சம்பளம் உயர்கிறதோ இல்லையோ ஆண்டுதோறும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகை மட்டும் உயர்த்தி விடுகின்றனர் என அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நாம் பல்வேறு பதிவுகளை காண முடிகிறது. ஆனால் முதல் முறையாக பெங்களூருவை சேர்ந்த ஒரு வீட்டு உரிமையாளர் வாடகையை குறைத்து இருப்பது குறித்து ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் ஒரு நபர் வெளியிட்டுள்ள ரெடிட் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபர் சி வி ராமன் நகரில் ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாராம். தொடக்கத்தில் அவர் மாதத்திற்கு 29 ஆயிரம் ரூபாயை வாடகையாக செலுத்தினார். இதனை அடுத்து இரண்டாவது ஆண்டில் வீட்டின் வாடகையை 32 ஆயிரம் ரூபாயாகவும், பின்னர் 35 ஆயிரம் ரூபாயாகயும் உயர்த்தியுள்ளனர்.
இது தவிர மெயின்டனன்ஸ் கட்டணமாக மாதத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த நிலையில் இந்த வீட்டில் தனக்கு உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பெரிய அளவில் வசதிகள் இல்லை என்பதால் இவ்வளவு அதிக வாடகை கொடுத்து இங்கு இருப்பதற்கு வேறு இடத்திற்கு மாறிவிடலாம் என அவர் எண்ணினாராம். இதற்காக தன்னுடைய வீட்டு உரிமையாளரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வீட்டு உரிமையாளர் ஒரு முன்னணி அமெரிக்க வங்கியில் மேலாண் இயக்குநராக பணிபுரிபவர். இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்து வீட்டு உரிமையாளர் நான் நேரில் வந்து பேசுகிறேன் என கூறினார். இதனை அடுத்து அவர் வீட்டிற்கு நேரடியாக வந்து வாடகைக்கு இருக்கும் நபரை சந்தித்து பேசி உள்ளார்.
வீட்டு உரிமையாளர் வரும்பொழுதே இனிப்புகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தாராம். அப்பொழுது இருவருக்கும் இடையே நடந்த உரையாடலில் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். வீட்டு வாடகை குறித்தும் அங்கே குறிப்பிட்ட சில வசதிகள் இல்லாதது குறித்தும் இவர் எடுத்துரைக்கிறார். இதனை உணர்ந்து கொண்ட அந்த உரிமையாளர் வீட்டு வாடகை 35 ஆயிரத்திலிருந்து 33,000 ஆக குறைத்தார். மேலும் மெயின்டனன்ஸ் கட்டணத்தையும் 3,000 ஆக குறைத்தாராம்.
பின்னர் இருவரும் நண்பர்களாகி தங்களுடைய வேலை, வேலையில் அடுத்த இலக்குகள் என்னென்ன என்பது குறித்து பேசி தொடங்கினார்களாம். பெங்களூருவில் கனிவான குணம் கொண்ட வீட்டு உரிமையாளர்களும் இருக்கிறார்களா என பலரும் இந்த நபரை புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications