பெங்களூர் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது எகிறும் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவுகள் தான். சமீப காலமாகவே பெங்களூர் வாசிகளை இந்த இரண்டு செலவுகளும் புரட்டிப் போட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது ஒரு புதிய பிரச்சனை தீயாய் பரவத் தொடங்கியுள்ளது. முக்கிய ஐடி நகரமாக இருப்பதால், இங்கு பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாடகை குறித்த ஒரு ரெட்டிட் பதிவு சமீபத்தில் பகிரப்பட்டது.
அதில் ஒரு நபர் தன்னுடைய 3BHK குடியிருப்பில் வசிப்பதற்கு ரூ.70,000 வாடகை கொடுப்பதாகவும், ஆனால் தன்னுடைய வீட்டில் வேலை செய்ய வரும் பெண்ணுக்கு மாதம் ரூ.3500-க்கு மேல் சம்பளம் வழங்க மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு அவர் வீட்டு வேலைக்கு வரும் பெண்களுக்கு ரூ.2500 தான் சரியான ஊதியம், ஆனால் பெங்களூரில் வேலை செய்யும் பலர் ஐடி ஊழியர்களை விட அதிக சம்பளம் பெறுகின்றனர் என்றும் புலம்பியிருந்தார்.
இவருடைய பதிவு தீயாய் பரவவே, நெட்டிசன்கள் அவரை சாடத் தொடங்கினர். உங்களால் வீட்டு வாடகைக்கு ரூ.70,000 தர முடிகிறது. ஆனால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் பெண்ணுக்கு சம்பளம் தர முடியவில்லையா என்ற கேள்வியை முன் வைத்தனர். அதிலும் சிலர் பெங்களூருவில் அசுர வேகத்தில் விலைவாசி உயர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் ஒருவரின் உழைப்பை சுரண்டி கொண்டு பணம் தர மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தனர்.

இன்னும் சிலர் அந்த நபருக்கு ஆதரவாகவும் பேசியிருந்தனர். வாடகை கட்டணம், கார் பார்க்கிங் கட்டணம், மெயின்டனன்ஸ் கட்டணம், குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய பள்ளி கட்டணம் என பெங்களூர் வாசிகள் ஏற்கனவே படாத பாடு பட்டு கொண்டு இருக்கையில், குடியிருப்புகளில் வேலை செய்பவர்கள் அதிக சம்பளம் கேட்பதாக கூறியிருந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் பெங்களூரில் நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. வீட்டு வாடகை, பள்ளி கட்டணம் மற்றும் பயணச் செலவுகள் போன்ற பல விஷயங்களுக்காக அவ்வப்போது இதே போன்ற விவாதங்கள் எழும். மேலும் அவை சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டால் அவ்வப்போது ட்ரெண்ட் ஆவதும் வழக்கம். ஆனால் முதன்முறையாக உழைப்பிற்கு தரும் ஊதியத்திலேயே இப்படி ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.
நகர்ப்புறங்களில் மனித நேயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஒவ்வொருவரின் உழைப்பிற்கும், அவர் வசிக்கும் இடத்திற்கும் ஏற்ப சம்பளம் வழங்குவது தான் ஆகச் சிறந்த தர்மம். அப்படி இருக்கையில் ரூ.70,000 வீட்டு வாடகைக்கு மட்டும் செலுத்தி விட்டு, கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பாளிகளுக்கு ரூ. 3,500 தர கணக்கு பார்ப்பது சங்கடத்தை ஏற்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications