பெங்களூரை சேர்ந்த 61 வயதான நௌஷாத் என்பவர் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்டில் ஒரு இந்திய உணவகத்தை நடத்தி வருகிறார். இது அங்குள்ள இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தோசை முதல் பிரியாணி வரை ரகரகமான ஐட்டங்கள் அங்கு கிடைக்கின்றன. முற்றிலும் இந்திய சுவை மாறாமல் இருப்பதால் மக்களிடையே அவை பிரபலமாகி விட்டன.
தனது ஹோட்டல் அனுபவம் பற்றி நௌஷாத் கூறுகையில், நான் வேலையில் இருந்து ரிட்டயர்டு ஆன பிறகு டூரிஸ்டாக இங்கு வந்தேன். காலை உணவுக்காக டீயும், பரோட்டாவையும் தேடிச் சென்றேன். ஆனால் அங்கு ஒரு கடையில் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஹோட்டல் ஆரம்பிப்பதோ அல்லது வேலை செய்வதோ பற்றி எந்த நினைப்பும் இல்லை.

நான் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கெல்லாம் தேடிப்பார்த்தால் ஏதாவது ஒரு இடத்தில் இந்திய உணவு கிடைக்கும். ஆனால் சாமர்கண்டில் ஒரு இடத்தில் கூட இந்திய உணவகம் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஒருவாரம் சாமர்கண்டில் சுற்றிப்பார்த்து அதன் நிலைமையை தெரிந்துக்கொண்டு மக்களின் பழக்க வழக்கங்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டு நிரந்தரமாக சாமர்கண்டில் குடியேறினேன்.
எனக்கென்று ஒரு இந்திய உணவகத்தைத் தொடங்கினேன், தொடக்கத்தில் கூட்டம் வரவில்லையென்றாலும் இப்போது தினசரி 350- 400 வாடிக்கையாளர்கள் எனது உணவகத்துக்கு வருகின்றனர்.
அவர்களது குடும்ப சுபகாரியங்கள், திருமண விழாக்களுக்கு ஏராளமான ஆர்டர்களைத் தருகின்றனர். இப்போது தொழில் சிறப்பாகச் செல்கின்றது. அன்றாடம் சமைக்கும் உணவுக்காக தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று புத்தம்புதிதாக காய்கறிகளை வாங்கி வருகிறேன். பலசரக்குகளையும் அவ்வப்போது வாங்கி பயன்படுத்துகிறேன்.
சாமர்கண்டில் 3000 இந்திய மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். அவர்களுக்கு இவ்வளவு நாள் கிடைக்காத இந்திய உணவுகளை நான் சமைத்து வழங்குகிறேன். சப்பாத்தி கறிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
நௌஷாத்தின் ஹோட்டலில் சென்னையைச் சேர்ந்த அசோக் காளிதாஸ் என்ற சமையல் கலைஞர் வேலை செய்கின்றார். அவரது கைப்பக்குவம் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து நௌஷாத் உணவகத்தில் உணவுகளில் காரம், புளிப்பு சுவைகள் சேர்க்கப்படுகின்றன. இந்திய மாணவர்களுக்கு தரமான வீட்டு உணவு போன்றும் விலை கட்டுப்படியாகும் வகையிலும் உணவுகள் கிடைக்கின்றன.
நௌஷாத் ஹோட்டலில் பிரபலமான ஐட்டங்களில் ஒன்று மசாலா தோசை. மற்றொன்று பிரியாணி, உஸ்பெகிஸ்தானில் பிரபலமாக இருக்கும் பிலாவ் சாதத்திலிருந்து சற்று வேறுபட்டது நமது பிரியாணி என்கிறார் செப் அசோக் காளிதாஸ்.
இந்த ஹோட்டலுடன் மாணவர்களுக்காக டிபன் சென்டர் ஒன்றை தொடங்க நௌஷாத் முடிவு செய்துள்ளார். மாணவர்கள், உள்ளூர் மக்கள் போக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இந்த ஹோட்டலில் வந்து சாப்பிடுகின்றனர். இதேபோன்று புகாரா, கிவா ஆகிய நகரங்களிலும் கிளையைத் தொடங்க நௌஷாத் திட்டமிட்டு வருகிறார்.
டெல்லியில் உள்ள உஸ்பெகிஸ்தான் தூதரகத்தின் தகவல்படி, உஸ்பெகிஸ்தானில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் 5,000 க்கும் அதிகமானோர் உள்ளனர். 2019-க்கு முந்தைய கோவிட் ஆண்டில், 28,000 இந்திய சுற்றுலாப் பயணிகள் உஸ்பெகிஸ்தானுக்குச் சென்றனர். இருப்பினும், இந்த ஆண்டு இதுவரை 30,000 ஐ தாண்டியுள்ளது.
'தி இந்தியன் கிச்சன்' என்ற பெயரில் இயங்கும் நௌஷாத்தின் இந்த உணவகம் சாமர்கண்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு நிம்மதி தரும் வகையில் செயல்படுகிறது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் லிப் தோசை முதல் சிக்கன் பிரியாணி வரை பரந்த அளவிலான மெனுவை விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications