கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது லக்ஸரி கார்கள் மீது கர்நாடக அரசு விதிக்கும் வரியைத் தவிர்க்க முயன்றதற்காக, தற்போது பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது, இவர் வாகனங்களை மற்ற மாநிலங்களில் பதிவு செய்து, கர்நாடகாவில் ஓட்டி வந்துள்ளார். இதன் மூலம் மாநில சாலை வரிகளைத் தவிர்க்கலாம் என எண்ணியுள்ளார்.
ஆனால், சாலை போக்குவரத்துத் துறை நடத்திய விசாரணையில் இது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, அந்த தொழிலதிபருக்கு ரூ.98.9 லட்சம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடைமுறைகள் சட்டவிரோதம் என்றும், வாகனம் பயணிக்கும் மாநிலத்தில் வரி செலுத்துவது கட்டாயம் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த தொழிலதிபர் தன்னுடைய Ferrari 812 Superfast காரை ஜார்கண்ட் மாநிலத்தில் பதிவு செய்துள்ளார். Mercedes-Benz காரை புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்து கர்நாடகாவில் ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அந்த தொழிலதிபர் பெங்களூருவில்தான் வசிக்கிறார். ஜார்கண்டில் பதிவு செய்யப்பட்ட Ferrari வாகனம் கர்நாடகாவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. இது விதிமுறைக்கு முரணானது" என்று தெரிவித்துள்ளனர்.
விதிமுறைகள் என்ன...?: ஒரு மாநிலத்திற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனம் 12 மாதத்திற்கும் மேல் கர்நாடகாவில் பயன்படுத்தப்படுகிறது என்றால், கர்நாடக சாலை வரியை கட்டாயம் செலுத்த வேண்டும். இது போன்ற சட்டத்தை மீறினால் அபராதம் மட்டுமல்லாமல் வாகன பதிவு ரத்து, போலீஸ் வழக்கு போன்ற நடவடிக்கைகளும் ஏற்படலாம்.
தொழிலதிபர் சிக்கியது எப்படி...?: மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட காரை பெங்களூருவில் இயக்குவது குறித்து மார்ச் மாதம் அந்த தொழிலதிபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, Ferrari காரை ஜனவரியில் சர்வீசுக்கு பெங்களூருவுக்கு கொண்டு வந்தோம். மூன்று மாதங்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், வாகனங்கள் திருப்பி அனுப்பப்படாமல், தொடர்ந்து கர்நாடகாவில் இயங்கி வந்ததால், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பதிவற்ற லக்ஸரி கார்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறையின் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு தொழிலதிபரிடமிருந்தும் ரூ.40 லட்சம் வரி வசூலிக்கப்பட்டது. அவர் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கான் பயன்படுத்தியிருந்த இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியிருந்தார். ஆனால், அந்த வாகனங்களும் கர்நாடகாவில் பதிவில்லாமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்து பின்னர் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம், வாகன உரிமையாளர்கள் சாலை வரி தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்கள் சட்டப்படி எளிதில் விடப்படமாட்டாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாகும். வாகனத்தை நீண்ட காலம் ஒரு மாநிலத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த மாநிலத்திற்கு உரிய சாலை வரியை கட்டுவது கட்டாயம்.
போக்குவரத்துத்துறை எச்சரிக்கை: இந்த விவகாரம், வாகன உரிமையாளர்கள் சாலை வரி தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்கள் சட்டப்படி எளிதில் விடப்படமாட்டாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாகும். வாகனத்தை நீண்ட காலம் ஒரு மாநிலத்தில் பயன்படுத்தி வந்தால், அந்த மாநிலத்திற்கு உரிய சாலை வரியை கட்டுவது கட்டாயம் ஆகும். சட்டத்தை மீறினால், வரி வசூலுடன் கூடுதலான அபராதம் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications