இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் கடந்த 5 வருடமாக ஏர்போர்ட் பகுதியில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்களும், ரியல் எஸ்டேட் திட்டங்களும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த டிரெண்ட் தெற்கு பெங்களூருக்கும் வந்துள்ளது.
தெற்கு பெங்களூர் பகுதியின் முக்கிய திட்டமாக கருதப்படும் மெட்ரோ திட்டம் பல தாமதங்களை எதிர்கொண்ட பிறகு, பெங்களூரின் முக்கிய தொழில்நுட்ப ஹப் ஆக விளங்கும் எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் மஞ்சள் லைன் இறுதியாக நிறைவடைந்து வருகிறது. பொம்மசந்திரா முதல் ஆர்.வி.சாலை வரையில் இயங்கும் இந்த மஞ்சள் லைன் திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்தாலும் இதில் இயக்க ரயில் பெட்டிகள் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மஞ்சள் லைனில் இயக்கப்படுவதற்காக முதல் ரயில் கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ஜனவரி 6 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மெட்ரோ சேவை விரைவில் இந்த வழித்தடத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா உறுதி செய்தது மட்டும் அல்லாமல், முதல் ரயில் விரைவில் வந்து சேரும் விஷயத்தை விளக்கமாக கூறினார். டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் இந்த ரயில் பெட்டிகளை கொல்கத்தாவில் ரயில் அனுப்பும் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதோடு ரயில்களை கொடியசைத்து அனுப்பி வைத்து, உற்பத்தி ஆலையை நேரில் ஆய்வு செய்து செயல்முறையை விரைவுபடுத்தவும் அவர் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனவரி 6 ஆம் தேதி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்க முதல் ரயில் தயாராக உள்ளது என்று தேஜஸ்வி சூர்யாகூறினார். இதை தொடர்ந்து டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் இரண்டாவது ரயிலையும், ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது ரயிலையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அதன்பிறகு, அவர்கள் மாதத்திற்கு ஒரு ரயிலை வழங்குவார்கள், செப்டம்பர் மாதத்திற்குள் மாதத்திற்கு இரண்டு ரயில்கள் வரை அதிகரிக்கும் எனவும் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.
BMRCL அதிகாரிகள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இயங்கும் வகையில் மூன்று ரயில்களுடன் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை இயக்க தொடங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். நெட்வொர்க்கில் மேலும் ரயில்கள் சேர்க்கப்படும்போது சேவை எண்ணிக்கை அதிகரிக்கும்.
பெங்களூர் மெட்ரோ திட்டத்திற்கான ரயில்களின் உற்பத்தியில் டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ்-க்கு தனித்துவமான சவால்களை கொடுத்துள்ளது. டிட்டாகர் நிறுவனம் அலுமினியத்தில் ரயில் பெட்டிகளை செய்வதில் நீண்ட கால அனுபவம் கொண்டு இருக்கும் வேளையில் முதல் முறையாக பெங்களூர் மெட்ரோ திட்டத்திற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டிகளை தயாரிக்கிறது. இதேவேளையில் CRRC நிறுவனம் நிர்ணயித்த கடுமையான தரக் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வரும் காரணத்தால் தாமதம் அதிகரித்து வருகிறது.
2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடைய வேண்டிய மஞ்சள் லைன் திட்டம் பல தடைகளை சந்தித்துள்ளது. இந்த வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தாலும், ரயில்களை கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்க தடையாக இருந்து வருகிறது.
மஞ்சள் லைனில் மெட்ரோ சேவைகள் விரைவில் தொடங்கப்படுவது மூலம் எலக்ட்ரானிக் சிட்டியில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஐடி பணியாளர்களுக்கும், இப்பகுதியில் வசிக்கும் பல லட்சம் மக்களுக்கும் பெரும் ஜாக்பாட் ஆக அமைய உள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி புறநகர் பகுதி என்பதால் இந்த மஞ்சள் லைன் பெங்களூரின் மையப்பகுதி வரையில் இணைக்கும் காரணத்தால் மக்களுக்கு போக்குவரத்து எளிமையாகும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications