கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் கடுமையாக இருக்கும் காரணத்தால் பெரும்பாலானவர்கள் தங்களுடைய அலுலவகம் இருக்கும் இடத்தையும், பயண நேரத்தையும் பொருத்து போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக மெட்ரோ சேவைகளை நாடுகிறார்கள்.
பெங்களூருவின் பிரதான பகுதிகளில் ஒன்றும், ஐடி நிறுவனங்கள் நிறைந்த எலக்ட்ரானிக் சிட்டியுடன் இணைக்கும் மஞ்சள் வழித்தடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது . பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் வந்து எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூர் மெட்ரோ நிர்வாகத்தை பொறுத்தவரை மஞ்சள் வழித்தடம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. நாள்தோறும் பலர் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை பயன்படுத்தி அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.

குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் உதவியாக இருக்கிறது. இதற்கிடையே பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு நபர் கூடுதல் நேரம் ரயில் நிலையத்தில் இருந்ததாக காரணம் கூறி அபராதம் விதித்திருப்பது தற்போது பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது. இது தொடர்பாக நிகில் என்பதவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் பெங்களூருவின் மஞ்சள் வழித்தடம் மிகச் சிறந்தது ஆனால் இந்த ரயில் சேவை தொடங்கக்கூடிய முதல் ரயில் நிலையத்திலேயே ஏறிவிட்டால் தான் உங்களுக்கு இடம் கிடைக்கும் இல்லை என்றால் உங்களால் இதில் பயணம் செய்யவே முடியாது என தெரிவித்திருக்கிறார். நான் சில்க் போர்டு ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் காத்திருந்தேன் ஒரு ரயில் வந்தது வரும் போதே அது முழுமையாக நிரம்பி இருந்தது, என்னால் ரயிலில் ஏற முடியவில்லை என கூறியுள்ளார்.
நான் அதே ரயில் நிலையத்திலேயே 20 நிமிடங்களாக காத்திருந்து ரயிலில் ஏறாமலே வெளியே வந்து விட்டேன். இதற்காக நான் ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் இருந்தேன் எனக்கூறி எனக்கு 59.5 ரூபாய் அபராதமாக விதித்திருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் மற்றும் நம்ம மெட்ரோ ஆகிய அமைப்புகளின் எக்ஸ் கணக்கை டேக் செய்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கான ரசீதையும் அவர் அதில் பதிவு செய்திருக்கிறார் . அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பலரும் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் இந்த செயலை திட்டி தீர்த்து வருகின்றனர்.
மஞ்சள் வழிதடத்தில் குறைந்த எண்ணிக்கையில் தான் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது இதனால் பலரும் தங்களால் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர் . இந்த சூழலில் ரயிலில் ஏற முடியாமல் 20 நிமிடங்கள் காத்திருந்து வெளியேறியவருக்கு அபராதம் விதித்திருக்கும் இந்த செயல் கடும் கோபத்தை எழுப்பி இருக்கிறது.
மஞ்சள் வழித்தடத்தில் கூடுதல் எண்ணிக்கையில் ரயில்களை இயக்க வேண்டும் அதுவரை பயணிகள் கூடுதல் நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்ததற்காக விதிக்கப்படும் அபராதங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications