பெங்களூருவில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அதிகபட்ச மெட்ரோ ரயில் கட்டணமானது 60 ரூபாயிலிருந்து 90 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணங்கள் 50% வரை உயர்த்தப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. அதிகபட்ச மெட்ரோ ரயில் கட்டணம் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் 2 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் என வசூல் செய்யப்படுகிறதூ. 2- 4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் , 4 - 6 கிலோ மீட்டர் வரை 30 ரூபாய், 6 - 8 கிலோமீட்டர் வரை 40 ரூபாய், 8 - 10 கிலோமீட்டர் வரை 50 ரூபாய், 10 - 12 கிலோமீட்டர் வரை 60 ரூபாய், 15 - 20 கிலோமீட்டர் வரை 70 ரூபாய், 20 - 25 வரை 80 ரூபாய், 25 - 30 கிலோமீட்டர் மற்றும் அதற்கு மேல் செல்லும் தொலைவுகளுக்கு 90 ரூபாய் என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் ரயில் டிக்கெட் கட்டணங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவை நியமனம் செய்திருந்தது. இந்த குழு கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணங்களை 50 சதவீதம் வரை உயர்த்தலாம் என கூறியிருந்தது. இந்த பரிந்துரையை ஏற்ற பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட கட்டணங்கள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தது.
இதன்படி தற்போது புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்பவர்கள் இதற்கு முன்பு 50 ரூபாய் வரை குறைந்தபட்ச பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும் அது தற்போது 90 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்களில் ஸ்மார்ட் கார்டுகளைக் கொண்டு ஞாயிற்றுகிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் கர்நாடக மாநில அரசு பேருந்து கட்டணங்களை 15 சதவீதம் வரை உயர்த்தியது. தற்போது மெட்ரோ ரயில் கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூருவில் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி இருப்பதாக பெங்களூருவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications