பெங்களூர் மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டினரும், ஐடி ஊழியர்களும் அதிகம் இருக்கும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதி மக்கள் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.வி. சாலை - போம்மசந்திரா மத்தியில் இயக்கப்படும் மஞ்சள் லைன் மெட்ரோ சேவை, கோச்சுகள் பற்றாக்குறை காரணமாக மீண்டும் தாமதமாகும் என தெரிய வந்துள்ளது.
மாதங்களைத் தாண்டி வருட அளவில் தாமதமாகி வரும் நிலையில், இத்திட்டத்திற்குக் கடந்த மாதம் கொல்கத்தாவில் இருந்து புதிய மெட்ரோ கோச் பெட்டிகள் வர துவங்கினாலும், இந்த வழித்தடத்தில் சேவையைத் துவங்க போதுமான பெட்டிகள் வராத காரணத்தால் இச்சேவையை துவங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

18 கிலோமீட்டர் நீளமுள்ள யெல்லோ லைன் மெட்ரோ சேவைக்குப் பல மாதங்களுக்கு முன்பே இயக்கத்திற்குத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், போதுமான பெட்டிகள் இல்லாததால் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) சேவைகளைத் தொடங்க முடியவில்லை.
முதலில் ஜனவரியில் இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டது, ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சீன நிறுவனத்திடமிருந்து மெட்ரோ கோச்சுகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை, ஒரு கோச் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள கோச்சுகள் மார்ச் மாதத்திற்குள் வந்து சேர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மெட்ரோ கோச்சுகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பிஎம்ஆர்சிஎல் ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இருப்பினும், நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட டெலிவரி காலகட்டத்தைப் பூர்த்தி செய்யத் தவறியதால், திட்டத்தில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள கோச்சுகள் வழங்கப்பட்ட பின்னர், பிஎம்ஆர்சிஎல் மஞ்சள் லைன் மெட்ரோ சேவையை டிரைவர் இல்லாத மெட்ரோ சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த தாமதம் எலக்ட்ரானிக் சிட்டிக்கு தினம்தோறும் பயணிக்கும் அனைத்து மக்களுக்கு நிச்சயமாக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய மெட்ரோ சேவை சில்க் போர்டு முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான சாலை போக்குவரத்து நெரிசலை பெரிய அளவில் குறைக்கும்.
பெங்களூரில் கேப் சேவைகளை ஒப்பிடும் போது மிகவும் மலிவான கட்டணத்தில் வேகமாக பயணிக்கும் வசதி மெட்ரோவில் கிடைக்கிறது. அனைத்திற்கும் மேலாக பெங்களூரின் தொழில்நுட்ப மையமான எலக்ட்ரானிக் சிட்டியை நகரின் பிற பகுதிகளுடன் இணைக்கும் காரணத்தால் அதிகப்படியான மக்கள் தினமும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணம் சமீபத்தில் 15% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, BMRCL அமைப்பு 30 முதல் 40% வரை கட்டணத்தை உயர்த்த உள்ளது.


Click it and Unblock the Notifications