கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலை போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது.இதில் இருந்து தப்பித்து சரியான நேரத்திற்கு அலுவலகம் , கல்லூரி உள்ளிட்டவற்றுக்கு செல்ல பெங்களூரு மக்களுக்கு இருக்கும் ஒரே வழி மெட்ரோ தான்.
பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் பெங்களூருவில் மெட்ரோ சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு நம்ம மெட்ரோவின் புளூ லைன் திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவின் சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பில் தொடங்கி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை செல்லும் மிக முக்கியமான மெட்ரோ ரயில் பாதையான புளூ லைனில் கட்டுமான பணிகள் 72.5 சதவீதத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட பதிலில், நம்ம மெட்ரோவின் புளூ லைன் மொத்தம் 58.19 கி.மீ நீளம் கொண்டது. இது சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பில் தொடங்கி, ஹெப்பால் சந்திப்பு வழியாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இணைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 29 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்றும் ஜூன் 30, 2026 நிலவரப்படி, இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் 72.5% முடிந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஜூலை 30, 2026 வரை மத்திய அரசு மொத்தம் 26,447.27 கோடி ரூபாயை பங்கீடு மற்றும் கடன் உதவி மூலம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த மெட்ரோ பாதை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த குறிப்பிட்ட தேதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
பொதுவாக, மெட்ரோ திட்டங்கள் தொடங்கப்பட்ட 5 முதல் 6 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான காலக்கெடு பணிகளின் வேகத்தை பொறுத்தே அமையும் என அரசு கூறியுள்ளது. மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் விளக்கம் தந்துள்ளது.
இதன்படி மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, மெட்ரோ திட்டங்களை அவ்வப்போது ஆய்வு செய்து முடிவுகளை விரைவாக எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மெட்ரோ திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமமான பங்களிப்புடன் கூடிய கூட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த ரயில் பணிகள் நிறைவடைந்துவிட்டால் பெங்களூரு மக்கள் விமான நிலையத்திற்கே மெட்ரோவில் செல்லலாம். தற்போது சாலை மார்க்கமாக நகரில் இருந்து விமான நிலையம் செல்ல நீண்ட நேரம் ஆகிறது , டாக்சிகளில் அதிக கட்டணம் கேட்கப்படுவதாக மக்கள் குறைபட்டு கொள்ளும் நிலையில் இந்த மெட்ரோ திட்டம் அவர்களுக்கு நிம்மதியை தரும்.


Click it and Unblock the Notifications

