பெங்களூருவின் நம்ம மெட்ரோ ரயில் போக்குவரத்து தேவைகளுக்கு ஒரு முக்கிய தீர்வாக உள்ளது. ஆனால், கட்டண உயர்வு பயணிகளுக்கு தொடர்ந்து பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே, கடந்த பிப்ரவரியில் 71.43% வரை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டுதோறும் 5% வரை கட்டண உயர்வு இருக்கும் என பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ ரயில் பயனாளிகளுக்கு அடுத்த அதிர்ச்சியை அளிக்கும் விதமாக, மெட்ரோ ரயில் கழகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டுதோறும் ரயில் கட்டணம் 5% வரை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்களுக்காக இந்த கட்டண உயர்வு அவசியம் என மெட்ரோ ரயில் கழகம் கூறியுள்ளது.

ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் கட்டணம் 71.43% வரை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, பெங்களூரு மெட்ரோ இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மெட்ரோக்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த கட்டண உயர்வு பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் கட்டணம் உயர இருப்பது கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கட்டண உயர்வு ஏன்..?: பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடக தலைநகரில் நடந்து வரும் மெட்ரோ திட்டங்களுக்காக ஆண்டுதோறும் தானியங்கி கட்டண உயர்வு தேவைப்படுகிறது.
2025 - 2026 முதல் 2029 - 2030 வரையிலான ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ரூ.911 கோடி, ரூ.1,338 கோடி, ரூ.1,440 கோடி மற்றும் ரூ.1,457 கோடி தேவைப்படும். ஆனால், நம்மிடம் இருக்கும் ரொக்கப் பணம் முறையே ரூ.601 கோடி, ரூ.917 கோடி, ரூ.853 கோடி மற்றும் ரூ.1,018 கோடி மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
எனவே, பராமரிப்புச் செலவுகளையும், ரயில் சேவைகளை மேம்படுத்துவதையும் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு அவசியம் என மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நம்ம மெட்ரோவின் பிங்க் லைன் 2026ஆம் ஆண்டில் திறக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 21.3 கிமீ நீளமுள்ள இந்த வழித்தடம் 2 கட்டங்களாக திறக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது. பன்னர்கட்டா சாலையில் உள்ள தவரெகெரே முதல் கலேனா அக்ரஹாரா வரையிலான உயர்மட்டப் பாதை மார்ச் 2026ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, டேரி சர்க்கிள் முதல் நாகவாரா வரையிலான 13.76 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை செப்டம்பர் 2026இல் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications