இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாகவும், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய புள்ளியாகவும் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் தொழில் நிறுவனங்களை ஈர்த்து வரும் இதன் அசுர வளர்ச்சி ஒருபுறம் பெருமை சேர்த்தாலும், நகரத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் நகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வருகிறது.
சாலைகளில் மணிக்கணக்கில் காத்திருப்பது என்பது பெங்களூருவில் வசிப்பவர்களின் அன்றாட பழக்கமாகி விட்டது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், நம்ம மெட்ரோ ரயில் திட்டம் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுடனும் பல்வேறு மெட்ரோ பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனாலும், கால தாமதமும், தொடரும் கட்டுமானப் பணிகளும், பெங்களூரு மக்களின் அன்றாட பயணச் சவால்களை மேலும் சிக்கலாக்கி வருகின்றன.

இந்நிலையில் தான், பெங்களூருவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நம்ம மெட்ரோவின் நீலப் பாதை (Blue Line), 2027ஆம் ஆண்டில் செயல்பட தொடங்கும் என பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. இந்த நீலப் பாதை, பெங்களூருவின் 2 முக்கிய பகுதிகளான சென்ட்ரல் சில்க் போர்டு-ஐ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும்.
போக்குவரத்து நெரிசல் குறையும் : இந்த மெட்ரோ பாதை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும், பெங்களூரு போக்குவரத்து நெரிசல் கணிசமாக கட்டுப்படுத்தும் என்பதால், வாகன ஓட்டிகளுக்கும், விமானப் பயணிகளுக்கும் மிகுந்த வசதியாக இருக்கும். மொத்தம் 58.19 கி.மீ. நீளமுள்ள நீலப் பாதை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பலமுறை தாமதமான பணிகள் : அதாவது, சில்க் போர்டு முதல் கே.ஆர். புரம் வரை 19.75 கி.மீ., கே.ஆர். புரம் முதல் விமான நிலையம் வரை 38.44 கி.மீ. ஆகிய இரு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ பாதை, வெளிவட்ட சாலை உட்பட நகரின் மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் செல்ல உள்ளது. இந்த திட்டம் நகரத்தின் போக்குவரத்துச் சிக்கல்களை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் காலக்கெடு பலமுறை தாமதமாகியுள்ளது.
2ஆம் கட்ட பணிகள் எப்போது..? : கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று மற்றும் வேறு சில காரணங்களால் கட்டுமானப் பணிகள் 2021-இன் பிற்பகுதியில் தான் தொடங்கப்பட்டன. இதன் ஆரம்பக் காலக்கெடு டிசம்பர் 2024 ஆக இருந்தது. பின்னர், பல தாமதங்களுக்குப் பிறகு, தற்போது நீலப் பாதையின் இரண்டாம் கட்டப் பணிகள் 2027இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் பாதை விரிவாக்கம் : நீலப் பாதை மட்டுமின்றி, மஞ்சள் பாதையை (Yellow Line) அத்திபெலே வரை நீட்டிக்கவும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க திட்டத்திற்கான அனுமதி கோரி, மெட்ரோ ரயில் நிர்வாகம் மத்திய அரசுக்கு ஏற்கனவே திட்டத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விரிவாக்க திட்டத்திற்கு கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அனேக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி. சிவன்னா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications