இந்தியாவின் ஐடி தலைநகரம் என்றும், சிலிகான் சிட்டி என்றும் அழைக்கப்படும் பெங்களூருவில், சிறிய அளவிலான வீட்டு உரிமையாளர்கள் மற்றும் கட்டிடம் கட்டுவோருக்கு சாதகமான ஒரு முக்கிய முடிவை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெருநகர பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சில சிறிய குடியிருப்பு கட்டிடங்கள், இனி 'ஆக்கிரமிப்புச் சான்றிதழ்' பெறுவதற்கான கட்டாயத் தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கர்நாடக மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய கொள்கை, நடுத்தர மற்றும் சிறிய கட்டுமானங்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலக்கு அளிக்கப்பட்ட கட்டிடங்களின் வகை : இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, சில குறிப்பிட்ட அளவுகளிலான குடியிருப்புக் கட்டிடங்கள் மட்டுமே இந்த விலக்கைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1,200 சதுர அடி வரையிலான பரப்பளவில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஆக்கிரமிப்புச் சான்றிதழ் கட்டாயம் இல்லை.

அதேபோல் தரைத்தளம் + 2 மாடிகள் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கும், வாகன நிறுத்துமிடம் + 3 மாடிகள் வரை கட்டப்படும் கட்டிடங்கள் ஆகிய குடியிருப்பு கட்டிடங்களுக்கு, இனி குடியமர்வு செய்வதற்கு முன் 'ஆக்கிரமிப்புச் சான்றிதழ்' (OC) பெறுவது கட்டாயமில்லை என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
நிபந்தனைகள் : குடியிருப்புகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், சில முக்கிய விதிமுறைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, கட்டிடம் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களின்படி கட்டப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன், இந்தக் கட்டிடங்கள் கட்டுமான மற்றும் நகர திட்டமிடல் விதிகளுக்கு முழுமையாக இணங்கி இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் கட்டிடங்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. கட்டிடப் பாதுகாப்பு, கட்டமைப்பு உறுதிப்பாடு மற்றும் திட்டமிடல் ஒழுங்குமுறைகளை உறுதி செய்வதற்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சட்ட அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் : கர்நாடக அரசு, பெருநகர பெங்களூரு ஆட்சி சட்டம், 2024-இன் பிரிவு 241(7)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விலக்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, சிறிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோருக்கும், அதிகாரிகளின் தலையீடு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஆக்கிரமிப்புச் சான்றிதழ்' பெறுவது என்பது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையாக இருந்த நிலையில், இந்த எளிமையான விதிவிலக்கு, பெங்களூருவில் வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பணச் செலவையும், கால விரயத்தையும் வெகுவாகக் குறைக்கும் என பொதுமக்களும், கட்டுமானத் துறையினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் GBA-வின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மேலும் எளிமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications