கர்நாடகா மாநிலம் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது. இங்கே போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுவது என பல பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவின் ஐடி நகரம் என பெயர் பெற்ற பெங்களூருவில் பெரும்பாலான ஐடி நிறுவனங்களையும் நகர் பகுதியையும் இணைக்கும் ஒரு சாலையாக அவுட்டர் ரிங் சாலை செயல்பட்டு வருகிறது . பீக் அவர்களில் இந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

இந்த அவுட்டர் ரிங் சாலையில் தற்போது போக்குவரத்து காவல்துறையினர் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை அறிவித்துள்ளனர் . இதன்படி அவுட்டர் ரிங் சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதி 45 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாலையின் 9ஆவது மெயின் ரோடு ஜங்ஷனில் தொடங்கி 5ஆவது மெயின் ரோடு ஜங்ஷன் வரை 45 நாட்களுக்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் காரணமாக மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்த அறிவுரை வழங்கியுள்ளனர். இப்பலூரில் இருந்து சில்க் போர்டு ஜங்ஷன் வரை வரக்கூடிய வாகனங்கள் வேறு பாதைகளில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் 14வது மெயின் ரோடு மேம்பாலம் வழியே சென்று அங்கிருந்து மெயின் ரோடில் இணைந்து கொள்ளலாம் என்றும் ஹெச்எஸ்ஆர் லேஅவுட்-இன் உள்வட்ட சாலைகளை பயன்படுத்தி சில்க் போர்டு மற்றும் ஓசூர் மெயின் ரோடு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த போக்குவரத்து மாற்றங்களை வாகன ஓட்டிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ கட்டுமான பணியால் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இந்த ஒரு சாலை மூடப்பட்டிருப்பதால் மற்ற சாலைகளில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே பெங்களூரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை சீராக்கும் நோக்கில் பீக் அவர் இல்லாத சமயங்களில் எல்லாம் அனைத்து சிக்னல்களிலும் ஒரே சமயத்தில் பச்சை விளக்கு ஒளிர்வதையும் ஒரே சமயத்தில் சிவப்பு நிற விளக்கு ஒளிர்வதையும் உறுதி செய்யக் கூடிய வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவுக்கு போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை சரிசெய்ய மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் பெங்களூருவுக்கு இடம்பெயர்கின்றனர். இதனால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியால் அரசு திணறுகிறது.


Click it and Unblock the Notifications