இந்தியாவின் ஐடி நகரமாக விளங்கும் பெங்களூர் டிராபிக் பிரச்சனை காரணமாக தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், கர்நாடக அரசு அடுத்தடுத்து முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதில் முக்கியமான சில்க் போர்டு முதல் கேஆர் புரா வரையில் மிகவும் முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
பெங்களூரு சிட்டியின் டிராபிக் பிரச்சனையை குறைக்கும் நோக்கில் மிகவும் பிரபலமான அவுட்டர் ரிங் சாலையில் ரூ.307 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் சில்க் போர்டு சந்திப்பு முதல் கேஆர் புரா மெட்ரோ நிலையம் வரையிலான 17.01 கிலோமீட்டர் தொலைவை முழுமையாக மேம்படுத்தப்படும்.

இந்த 17.01 கிலோமீட்டர் தொலைவுக்கு கர்நாடக அரசு 10 வழி சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இரு பக்கமும் மூன்று மெயின் லேன்கள் மற்றும் இரண்டு சர்வீஸ் ரோடு லேன்கள் கொண்ட 10 வழி சாலையை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் டிராபிக் பிரச்சனை குறைந்து வாகனங்கள் விரைவாக செல்ல உதவும். பெங்களூரு ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (B-SMILE) அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
இதோடு இந்த சாலையின் இரு பக்கமும் கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்படும். இந்த பாதை பிரத்தியேகமாக சைக்கிளில் பயனிப்பவர்களுக்கு பயன்படும். மக்களுக்கு வசதியாக புதிய வடிவிலான பஸ் ஸ்பாட்கள் மேம்படுத்தப்படும்.
முக்கியமாக இப்ளூர் முதல் கேஆர் புரா வரையிலான மெட்ரோ பகுதியில் ஸ்கைவாக் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை பொது-தனியார் கூட்டுறவு (PPP) மாடலில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்கள் டிராபிக் நிறைந்த சாலையை கடக்காமல் பாதுகாப்பாக செல்ல உதவும். இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்கும் என பெரிய அளவில் நம்பப்படுகிறது.
முதலில் ரூ.400 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட இந்த திட்டத்துக்கு அமைச்சரவை ரூ.307 கோடி ஒப்புதல் அளித்துள்ளது கவணிக்கப்பட வேண்டியதாக உள்ளது. சமீப காலமாக அவுட்டர் ரிங் சாலையில் இருக்கும் நிறுவனங்கள் அடுத்தடுத்து புகார்களை கொடுத்து வருகிறது. இதை சரிசெய்யும் வண்ணம் இப்புதிய 307 கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பெங்களூரு அவுட்டர் ரிங் சாலையில் செய்யப்படும் ஒவ்வொரு மேம்பாடும் இந்நகர மொத்த போக்குவரத்துக்கு நெரிசலுக்கும் பெரிய நிவாரணத்தை தரும். 17 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பகுதி தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இவர்களின் பயண நேரத்தை குறைப்பது மூலம் பெங்களூர் மக்களுக்கும் சரி, பொருளாதாரத்திற்கும் சரி கட்டாயம் பலன் அளிக்கும்.


Click it and Unblock the Notifications