பெங்களூரில் பள்ளி கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்த வருவதால் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இங்கு உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பள்ளிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகிறது. சில பள்ளிகள் 30 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த கட்டண உயர்வு தாங்க முடியாத அளவிற்கு நிதிச்சுமையை அதிகரிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் குடும்பங்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் சில பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு பெற்றோர் 2 குழந்தைகளை படிக்க வைக்க அதிக செலவாவதாக தனது விரக்தியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஒரு குழந்தைக்கு ரூ. 42,000 முதல் ரூ. 44,000 வரை பள்ளிக் கட்டணம் செலுத்தியதாகவும், ஆனால் இப்போது இந்த தொகை ரூ. 64,000 முதல் ரூ. 68,000 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். கல்வி கட்டணம் மட்டுமின்றி பாடப்புத்தகங்கள், போக்குவரத்துச் செலவுகள், சீருடைகளுக்கான செலவுகள் ஆகியவையும் கணிசமாக உயர்ந்து வருகிறது, கல்விச் செலவுகளை நிர்வகிப்பது முன்பை விட இன்னும் கடினமாகிவிட்டதாக சில பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாய்ஸ் ஆஃப் பேரன்ட்ஸ் என்ற அசோசியேஷனின் பொதுச்செயலாளரான சித்தானந்த் பெரும்பாலான பெற்றோரின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே அதிகரிப்பதாகவும் பள்ளிகள் இத்தகைய உயர்வுகளை நியாயப்படுத்துவது சரி இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு ஒரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே ஃபர்ஸ்ட் டேர்ம் கட்டணத்தை கேட்கும் நடைமுறை குறித்தும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதற்கு நேர்மாறாக கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் டி. சசிகுமார் ஆசிரியர் சம்பளம் உட்பட அதிகரித்து வரும் செலவுகளை காரணம் காட்டி கட்டண உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும் 30 முதல் 40 சதவீதத்தை தாண்டி கட்டணங்கள் உயர்வது குறித்து பெற்றோர்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனியார் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசுக்கு அதிகாரம் குறைவு என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா ஒப்புக்கொண்டார். ஆனால் அதிகப்படியான பள்ளிக் கட்டண உயர்வைத் தவிர்க்க அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்குமாறும் ஊக்குவித்தார். இந்த அதிகரிப்புக்கு பள்ளிகள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும், பெற்றோர்களின் வருமான உயர்வுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாக உள்ளது. அரசாங்கம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்தக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, கட்டண உயர்வை ஒழுங்குபடுத்தவும், கல்வி மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல பெற்றோரின் வேண்டுகோளாக உள்ளது.


Click it and Unblock the Notifications