பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூரு அண்மைக்காலமாக கடும் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் வெயிலும் மக்களை ஒரு புறம் வாட்டி வருகிறது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்படி வெயிலில் இருந்து தப்பிக்க ஒருவர் செய்த செயல் தான் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
ரிஷப் ஸ்ரீவாஸ்தவா என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூரு நகரம் சில்லென்ற சூழலில் இருந்து கிரில்லுக்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார். அதாவது எப்பொழுதும் சில்லென இருக்கும் பெங்களூரு நகரம் தற்போது அனைவரையும் வறுத்தெடுக்கும் நகரமாக மாறிவிட்டது என அவர் கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் தான் தற்போது ஓயோவில் ஏசி ரூம் எடுத்து தஞ்சம் அடைந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பெங்களூருவாசிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
பெங்களூரு வெயில் குறித்து பலரும் இதில் புலம்பலை பதிவிட்டு வருகின்றனர். ஓயோ ரூம்ஸ் நிறுவனம் இதனை மறுபதிவிட்டு பெங்களூரு உனக்கு இருந்தது ஒரே வேலை , அதையும் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளது.
பெங்களூரில் அண்மைக்காலமாக வெயில் அதிகரித்து வருவது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் காண முடிகிறது . அண்மையில் ஒரு நபர் டிராபிக் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
அதேபோல பெங்களூருவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கடும் வெப்பம் காணப்படுகிறது. இங்கே வெப்பநிலையானது 36.4 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் கலாபுராகியில் 40 டிகிரி செல்சியஸ் என வெப்பம் பதிவாகியுள்ளது.
பெங்களூரு நகரம் என்றாலே குளுகுளு சூழல் என்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதோ வெயில், தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நினைவுக்கு வருகின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலைகள் என்பது பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை, போதிய மழையின்மை, வெயில், வறட்சி ஆகிய பிரச்னைகளை மக்கள் படிப்படியாக அனுபவித்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications