பெங்களூர்: நகை, கார் மற்றும் இதர பொருட்களை திருடி போலீசில் சிக்கிக்கொண்ட கதைகள் பலவற்றை நாம் கேட்டிருப்போம். ஆனால் சுவாரசியமாக இருவர் காலணிகளை திருடி லாபம் பார்த்து உள்ளனர். அதுவும் பிராண்டட் ஷூக்கள் தான் இவர்களது டார்கெட். கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை குறிவைத்து இந்த மர்ம ஆசாமிகள் காலணிகளை திருடி வந்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள காலணிகளை திருடியதாக தற்போது இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கோவில்களில் கடந்த 7 ஆண்டுகளாக பிராண்டட் ஷூக்களை திருடி வந்த 2 மர்மநபர்களை வித்யாரண்யபுரா போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களும் 10,000 ஜோடிகளுக்கு மேல் காலணிகளைத் திருடியிருக்கின்றனர்.

அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சுமார் 715 ஜோடி பிராண்டட் ஷூக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்படி ரூ.10 லட்சம் மதிப்புள்ள காலணிகளும், மற்ற பொருட்களும் மீட்கப்பட்டன.
கங்காதர் மற்றும் எல்லப்பா என அடையாளம் காணப்பட்ட அந்தக் குற்றவாளிகள், திருடப்பட்ட காலணிகளை ஊட்டி, புதுச்சேரி மற்றும் பிற சுற்றுலா தலங்களில் விற்பனை செய்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட காலணிகளை விற்க சண்டே பஜாரையும் பயன்படுத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட கங்காதர் மற்றும் எல்லப்பா ஆகியோர் இரவு நேரங்களில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்து வீடு வீடாக சென்றுள்ளனர். அது மட்டும் இன்றி கோவில்களையும் குறி வைத்து பல காலணிகளை திருடியுள்ளனர்.
அதுவும் பிராண்டட் ஷூக்களை மட்டுமே குறிவைத்து எடுத்துள்ளனர். காலணிகளை திருடிய பிறகு, இருவரும் அவற்றை சுத்தம் செய்து புதிய காலணிகளை வாங்கும் விலையை விட மலிவான விலைக்கு பிறரிடம் விற்பனை செய்துள்ளனர்.
வித்யாரண்யபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் காலணிகள் மற்றும் இரண்டு கேஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் திங்கள்கிழமை புகார் அளித்தார். போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ குறித்த விவரங்களை பெற்றனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சுமார் 750 ஜோடி ஷூக்கள் இந்த இருவரின் வீட்டிலும் இருந்து மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5,000 ஜோடி ஷூக்களுக்கு மேல் இவர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
போலீசார் விசாரணையில் இது தொடர்பான விஷயங்கள் தெரிய வரலாம். காலணிகளை விரும்பி வாங்கும் நபர்களுக்கு, இதுபோன்ற விஷயங்கள் எரிச்சலூட்டும் வகையில் தான் உள்ளது. இது போன்ற திருட்டுகளைத் தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications