பெங்களூரு: விடுமுறை காலம் முடிந்து இன்னும் சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் தற்போதே கல்வி கட்டணங்கள் தொடர்பான மெசேஜ்களை பெற்றோருக்கு அனுப்பி வைக்க தொடங்கிவிட்டன.
பெங்களூருவில் கடந்த ஆண்டை விட கல்விக் கட்டணங்களை உயர்த்தி இருக்கும் தனியார் பள்ளிகள், ஒரே தவணையிலேயே மொத்த பணத்தையும் செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெங்களூருவில் செயல்படக்கூடிய சில தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என பெற்றோரை நிர்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு வரை இரண்டு முதல் மூன்று தவணைகளில் கட்டணத்தை செலுத்த அனுமதித்த பள்ளிகள் இம்முறை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என கூறுவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிபிஎஸ்ஈ, ஐசிஎஸ்ஈ மற்றும் எஸ்எஸ்எல்சி போர்டுகளை சேர்ந்த தனியார் பள்ளிகள் ஒரே தவணையில் பணத்தை செலுத்த பெற்றோரை நிர்பந்தம் செய்வதாக கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட கல்விக் கட்டணங்களை 25 முதல் 30 % வரை தனியார் பள்ளிகள் உயர்த்தியுள்ளன. இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பேட்டியளித்துள்ள கர்நாடக தனியார் பள்ளிகளின் பெற்றோர் கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டி என் யோகானந்தா, "ஒரே தவணையில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம்?, பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் மாதாந்திர ஊதியம் தானே வழங்குகிறது? அப்படி இருக்கையில் பெற்றோரிடம் மொத்தமாக கட்டணத்தை கேட்பது முறையாகுமா?" என வினவியுள்ளார்.
"கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் கணிசமான அளவு தங்களது கட்டணத்தை உயர்த்தி விட்டன. ஆனால் இது தொடர்பாக பெற்றோரிடம் அவர்கள் எந்த ஒரு ஆலோசனையிலும் ஈடுபடவில்லை" எனக் கூறியுள்ளார்.
90% பள்ளிகள் முன்பை விட தற்போது கட்டணங்களை உயர்த்தியுள்ளன, ஆனால் எதற்காக இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, எதற்காக இவ்வளவு தொகையை கட்டணமாக வாங்குகிறார்கள் என்ற விளக்கங்களை பள்ளி நிர்வாகங்கள் தர மறுக்கின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்திருக்கிறார்.
இதனிடையே பெற்றோர் கூட்டமைப்பினர் தெற்கு பெங்களூருவில் உள்ள டெபுடி டைரக்டர் ஆப் பப்ளிக் டிஸ்ட்ரிபியூஷன் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து பள்ளி கட்டண உயர்வு தொடர்பாகவும், ஒரே தவணையில் பணத்தை செலுத்த கூறுவது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளனர்.
ஒரு குழந்தைக்கே கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கிறது, இதனை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என கூறுவது சரியாகுமா என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநில பள்ளிகளின் கூட்டமைப்பிடம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர், அதற்கு கல்விக் கட்டணங்களை தவணை முறையாக வசூலிப்பது மற்றும் ஒரே முறையாக வசூலிப்பது என்பன உள்ளிட்ட முடிவுகளை அந்தந்த பள்ளிகளும் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகளுமே எடுத்துக் கொள்கின்றன.
நடைமுறையில் ஒரே முறையாக கல்வி கட்டணத்தை செலுத்துங்கள் என கூறக்கூடாது என்று எந்த ஒரு சட்டமும் இல்லை என கர்நாடக மாநில பள்ளிகளுக்கான மேலாண்மை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சசிகுமார் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications