பெங்களூரின் ஹென்னூர் அருகே உள்ள ஹோரமவு அகராவின் அஞ்சனாத்ரி லேயவுட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் காரணமாகச் சரிந்து விழுந்துள்ளது. இதில் குறைந்தது 17 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் வேளையில், இதில் சிக்கியவர்கள் பெரும்பாலும் இக்கட்டிடத்தின் கட்டுமான பணியில் பணியாற்றியவர்கள் எனத் தெரிகிறது.
இந்த சம்பவம் கனமழையின் போது நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இக்கட்டிடம் விழும் வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகியுள்எளது. மேலும் கட்டிடம் இடிந்து விழுந்த சில நிமிடத்திலேயே தீயணைப்புத் துறையும், அவசர உதவி குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் 3.40 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது வரையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூர் வடக்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒரு மூத்த போலீஸ் அதிகாரி பிடிஐ-க்கு கொடுத்த தகவல்படி "கட்டிடத்தின் உள்ளே 17 பேர் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, பல துறையின் உதவியுடன் ஒருங்கிணைந்த முயற்சியில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
பெங்களூரில் எப்போதும் இல்லாத அளவிற்குக் கனமழையை எதிர்கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை GKVK ஆய்வகத்தில் 186.2 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று பதிவான 178.9 மி.மீ. என்ற முந்தைய அதிகபட்ச 24 மணிநேர பதிவையும் முறியடித்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வரும் மழையால் பொதுமக்களின் வாழ்க்கை, குறிப்பாக வட பெங்களூரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது யெலஹங்கா மற்றும் தொட்டபொம்மசந்திரா போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதன் விளைவாகப் பல நீர்நிலைகள் நிரம்பி வழிய துங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அதிகாரிகள் இப்பகுதியில் இருக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications