ஒரு காலத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என்றும், வாய்ப்புகள் நிறைந்த பூமி என்றும் கொண்டாடப்பட்ட பெங்களூருவின் வசீகரம் சமீபகாலமாக மங்க தொடங்கியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் கலாச்சாரம், உலகளாவிய ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் திறமையாளர்களின் தொடர்ச்சியான வருகை ஆகியவற்றால் 'இந்தியாவின் சிலிகான் வேலி' என்று பெயரெடுத்த பெங்களூரு, தற்போது உள்கட்டமைப்பு இல்லாத வேகமான நகரமயமாக்கலின் அழுத்தத்தால் தத்தளித்து வருகிறது.
பெங்களூருவின் தினசரி வாழ்க்கை, அதன் உயர் தொழில்நுட்ப புகழுக்கு நேர்மாறாக, மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. தீராத போக்குவரத்து நெரிசல், குண்டும் குழியுமான சாலைகள், அதிகரித்து வரும் மாசுபாடு, கடுமையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் வானுயர்ந்த சொத்து விலைகள் ஆகியவை பெங்களூருவில் வசிப்பதை மிகுந்த மன அழுத்தத்திற்குரியதாக மாற்றியுள்ளன.

இதன் காரணமாக, பல ஐடி வல்லுநர்கள் மற்றும் குடும்பங்கள், "இந்தச் சிரமங்களை சகிப்பது அவசியமா?" என்று கேள்வி எழுப்பி, பெங்களூருவை விட்டு வெளியேறி, அருகிலுள்ள சிறிய நகரங்களை நோக்கிச் செல்ல தொடங்கியுள்ளனர். முதலீட்டு வங்கியாளர் சார்த்தக் அஹுஜா, லிங்க்டுஇன் தளத்தில் இந்த கருத்தை வலியுறுத்தி, மோசமடைந்து வரும் வாழ்க்கை சூழல் காரணமாக மக்கள் பெங்களூருவை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், "பெங்களூரு இப்போது உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் 3-வது இடத்தில் உள்ளது. மக்கள் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 134 மணிநேரம் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்" என்று அவர் சுட்டிக் காட்டினார். போக்குவரத்து மட்டுமின்றி, கட்டுப்படியாகாத வீட்டு விலைகள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவை இங்கு வாழ்க்கையை மிகவும் கடினமாக்குவதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த வெளியேற்றத்தால் அதிகப் பலன் அடைந்துள்ள நகரங்களில் ஒன்று மைசூரு. "மைசூருவில் எங்கு வேண்டுமானாலும் 15 நிமிடங்களுக்குள் பயணம் செய்யலாம். மேலும், இங்குள்ள வாழ்க்கை செலவு பெங்களூருவை விட 10% முதல் 20% வரை குறைவு" என்று அஹுஜா தெரிவித்துள்ளார்.
மைசூருவில் கடந்த ஓராண்டில் சொத்து விலைகள் 50% வரை அதிகரித்திருந்தாலும், அவை இப்போதும் பெங்களூருவை விட 30% முதல் 50% வரை மலிவாகவே உள்ளன. உதாரணமாக, மைசூருவில் குவெம்பு நகர் மற்றும் விஜயநகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.60 லட்சம் விலையில் தொடங்குகின்றன. அதே சமயம், 2023 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை, இணைப்பை மேம்படுத்தி, இந்த இடப்பெயர்வு போக்குக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது.
இதன் காரணமாக, முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் மைசூருவில் நீண்ட கால முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலை பெங்களூருவுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று அஹுஜா நம்புகிறார். "இது மும்பை, டெல்லி, குர்கான், புனே உள்ளிட்ட நமது அனைத்து மெட்ரோ நகரங்களின் பிரச்சனையாகும்" என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோ நகரங்களில் கண்டறியப்பட்ட வளர்ச்சி, இனி வரும் 10 ஆண்டுகளில் இரண்டாம் நிலை (Tier 2) நகரங்களில் இருந்துதான் வரும் என்று அவர் கணித்துள்ளார். இந்தியாவின் பெரிய மெட்ரோ நகரங்கள் உள்கட்டமைப்பு நெருக்கடியை சமாளிக்க போராடும் வேளையில், சிறிய, வாழ தகுந்த 2ஆம் நிலை நகரங்கள் விரைவில் வளர்ச்சிக்கும், சிறந்த வாழ்க்கைக்கும் புதிய மையங்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications