பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் ஐடி தலைநகராக இருக்கக்கூடிய பெங்களூருவில் ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் எப்படி தங்களுடைய முதலீட்டை திட்டமிட வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
பெங்களூருவில் அண்மை காலமாக வீட்டுமனைகளில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 1- 2 கோடி ரூபாய் கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்கு பதிலாக வீட்டுமனைகளாக வாங்கி ஓய்வு பெறும் காலத்தில் வீடு கட்டி செட்டில் ஆகி விடலாம் என்ற யோசனை பலரிடமும் எழுந்திருப்பதே இதற்கு காரணம் என்ன ரியாலிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் சுனில் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் மதிப்பை விட வீட்டுமனைகளுக்கான தேவையும் அவற்றின் விலையும் உயர்ந்து வருவதாக அவர் கூறுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் மறுவிற்பனை மதிப்பு குறைவது, வாங்குவதை விட குறைந்த இடமே விற்பனைக்கு செல்வது ஆகியவையே பலரும் வீட்டு மனைகளை நோக்கி செல்ல காரணமாம்.
பெங்களூருவில் தேவனஹள்ளி, கோரமங்கலா மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நிலங்களின் மதிப்பு கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு உயர்ந்துள்ளதாக கூறுகிறார். அதே வேளையில் வடக்கு பெங்களூரு பகுதிகளில் நிலங்களின் விலை ஆரோக்கியமான முறையில் உயர்ந்து வருவதாக குறிப்பிடுகிறார்.
பெங்களூரு புறநகர் பகுதிகளில் கடந்த சில காலங்களாக வீட்டு மனைகளின் மதிப்பு உயர்கிறது என ரியல் எஸ்டேட் துறையில் இயங்கக்கூடிய நபர்கள் கூறுகின்றனர். வடக்கு பெங்களூருவில் இருக்கக்கூடிய தேவனஹள்ளி , ஹென்னூர், பாகலூர், எலகங்கா பகுதிகளில் வீட்டுமனைகளின் மதிப்பு உயர்ந்து வருவதாக கூறுகின்றன.
பெங்களூருவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளோடு ஒப்பிடும்போது வடக்கு பகுதியில் வீட்டுமனைகளை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்களாம். புறநகர் ரயில் சேவை , ரிங் ரோடு, பெங்களூரு சேட்டிலைட் டவுன் சாலை என உள்கட்டமைப்பு திட்டங்கள் வேகமாக நடைபெற்று வரும் இடங்களில் வீட்டு மனைகளை வாங்கும் போக்கு உயர்ந்துள்ளதாம்.
பெங்களூருவில் சராசரியாக 1200 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஒரு சதுர அடிக்கு 7000 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது . கிரேடு ஏ நிலையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடிய வீட்டு மனைகளின் விலை அதிகமாக இருக்கிறது . இவை ஆண்டுக்கு 20% வரை உயர்கிறது. வீட்டு மனையை விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் அது அமைந்துள்ள இடம் ஆகியவற்றை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் கூறுகின்றன.
கேட்டட் கம்யூனிட்டி முறையில் வீட்டு மனைகள் மேம்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அதற்குள்ளேயே நீச்சல் குளங்கள் ,கிளப் ஹவுஸ்கள், உடற்பயிற்சி மையங்கள் ஆகிய வசதிகளும் இருக்கின்றன.
எனவே இதனை ஒரு பாதுகாப்பான முதலீடாக பலரும் கருதுகின்றனர் என சொல்லப்படுகிறது . பிரிஸ்டீஜ் குழுமம் உள்ளிட்ட முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் வீட்டு மனைகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. எனவே பெங்களூருவில் ரியல் எஸ்டேட் முதலீடு மேற்கொள்ள நினைப்பவர்கள் மனைகளை வாங்கலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications