பெங்களூரு: பெங்களூருவில் வீடுகளின் விலை ஒவ்வொரு காலாண்டுக்கு சராசரியாக 3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 4.5% என உயர்ந்த வீடுகளின் விலை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 3% உயர்ந்துள்ளது. இதனால் பெங்களூருவில் சராசரியாக வீடுகளின் ஒரு சதுர அடி விலை என்பது 9,299 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் இது தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூருவில் குடியிருப்புகளின் விலை என்பது கணிசமான அளவு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒரு சதுர அடியின் விலை 7,396 ரூபாய் அளவில் இருந்து தற்போது 9,299 ரூபாய் என உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூனுக்கு இடைப்பட்ட காலத்தில் குடியிருப்புகளுக்கான தேவை 8% குறைந்திருந்தாலும் அதன் மதிப்பு என்பது 3% சதவீதம் உயர்ந்திருக்கிறது என மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலண்டில் ஒரு சதுர அடியின் சராசரி விலை 8,892 ரூபாய் என்ற அளவில் இருந்து தற்போது 9,299 ரூபாய் என அதிகரித்துள்ளதாம். அதே போல நேரடியாக குடியேறக்கூடிய வகையில் இருக்கக்கூடிய ready-to-move properties மதிப்பு 2.41% உயர்ந்துள்ளதாம்.
பெங்களூருவைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் மூன்று படுக்கை அறை கொண்ட வீடுகளை வாங்குவதற்கே முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது. எனவே மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவை 54 % உயர்ந்துள்ளது. அதேபோல இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவை 38 % அதிகரித்துள்ளது.
பொதுவாக மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் 13.8% உயர்ந்துள்ளது, அதாவது ஒரு சதுர அடியின் விலை 9,100 என்ற அளவில் இருக்கிறது. அதேபோல இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகளின் விலை 16.4 % என உயர்ந்து ஒரு சதுர அடியின் விலை 7,600 ரூபாயாக இருக்கிறது.
பெங்களூரு நகரம் தொழில்நுட்ப மையமாக இருப்பது, பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலையான பொருளாதாரம், ஆகியவை காரணமாக வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதாக மேஜிக் பிரிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வுத்துறை தலைவர் அபிஷேக் பாத்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒயிட் ஃபீல்டு முதலிடத்தில் இருக்கிறது . இரண்டாவது இடத்தில் சர்ஜாபுரா சாலை மூன்றாவது இடத்தில் பல்லாரி சாலை நான்காவது இடத்தில் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ஐந்தாவது இடத்தில் கனகபுரா சாலை ஆகியவை இருக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications