பெங்களூரு: இந்தியாவில் நாம் சொந்தமாக கார், இருசக்கர வாகனம் உளளிட்டவற்றை வாங்கி பயன்படுத்தும் போது அதற்கு என அந்த மாநிலம் விதிக்கக் கூடிய குறிப்பிட்ட சாலை வரியை நாம் செலுத்தி ஆக வேண்டும். ஆனால் பல்வேறு வாகன உரிமையாளர்களும் இந்த சாலை வரிகளை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.
அப்படி கர்நாடக மாநிலத்தில் சாலை வரிகளை செலுத்தாமல் பயன்படுத்தி வரும் வாகனங்களை ஆர்டிஓ அதிகாரிகள் பிடித்து வருகின்றனர். பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மற்ற மாநிலங்களில் நாம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அந்த காலம் முடிந்தவுடன் அந்த மாநிலத்தின் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்து சாலை வரி செலுத்தியாக வேண்டும். கர்நாடக மாநிலத்தில் வெளி மாநில பதிவு கொண்ட வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய முறையில் வரி செலுத்தாமல் ஏமாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .

அப்படி ஃபெராரி ரக கார் ஒன்று சாலை வரி செலுத்தாமல் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிவப்பு நிறம் கொண்ட Ferrari SF90 Stradale கார் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு சாலைகளில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த கார் பெங்களூருவில் வலம் வருகிறது. ஆனால் ஆர்டிஓ பதிவுகளை ஆய்வு செய்தபோது அந்த கார் பதிவு செய்யப்படாமலும் வரி செலுத்தப்படாமலும் கர்நாடக மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூரு தெற்கு பகுதி ஆர்டிஓ அதிகாரிகள் அந்த ஃபெராரி ரக கார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
அந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கி பதிவு செய்யப்பட்டது என தெரிய வந்தது, இதனை அடுத்து அந்த காரை கர்நாடகாவிற்கு கொண்டு வந்தவர்கள் உரிய சாலை வரி உள்ளவற்றை செலுத்தாமல் பயன்படுத்தி வருவதை ஆர்டிஓ அதிகாரிகள் கண்டறிந்தனர். வாகனத்தை கைப்பற்றிய ஆர்டிஓ அதிகாரிகள் அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். மாலைக்குள் சாலை வரியை செலுத்தியாக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது, இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர் .
இதனை அடுத்து அந்த வாகனத்தின் உரிமையாளர் அன்றைய தினமே அந்த வாகனத்திற்காக 1.42 கோடி ரூபாயை சாலை வரியாக செலுத்தி வாகனத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்த காரின் விலை 7.5 கோடி ரூபாய் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் இதே போல கர்நாடகாவில் பிஎம்டபிள்யூ , ஃபெராரி என 30 ஆடம்பர கார்கள் வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications