இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்று பெங்களூர், வேலைவாய்ப்புக்காகவும், வர்த்தகத்திற்காகவும் தினமும் பல்லாயிரம் பேர் இந்நகருக்கும் வரும் காரணத்தால் எப்போதும் உயர்ப்புடன் இருக்கும் ரியல் எஸ்டேட் துறை தற்போது மந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் முக்கியமாக பெங்களூரின் பிரபலமான, ஹாட் ரியல் எஸ்டேட் பகுதிகளாக இருக்கும் பல பகுதிகள் தற்போது முடங்கியுள்ளது.
பெங்களூரின் வைட்ஃபீல்டு, சர்ஜாபூர் சாலை மற்றும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகள் ஒரு காலத்தில் நகரின் முக்கிய ரியல் எஸ்டேட் வளர்ச்சியின் மையமாக விளங்கின. முக்கியமாக இந்த பகுதிகள் ஐடி பார்க்குகளுக்கு அருகில் இருப்பதாலும், தொடர்ந்து இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரும் காரணத்தாலும் மக்கள் இப்பகுதிகளில் வீடு வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

ஆனால், தற்போது இப்பகுதியில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் வேகம் குறைந்து வருவதாக உள்ளூர் ரியல் எஸ்டேட் முகவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரு மாதங்களாக, பண்டிகை காலம் இருந்தபோதிலும், வாங்குபவர்களின் எண்ணிக்கையும், தேவையும் குறைந்துள்ளன.
வைட்ஃபீல்டு முதல் சர்ஜாபூர் சாலை வரையிலான கிழக்கு ஐடி வழித்தடம் மற்றும் ஹெப்பால், யெலஹங்கா, தேவனஹள்ளி உள்ளிட்ட வடக்கு பெங்களூரு பகுதிகளில் ரியல் எஸ்டேட் என்கொயரி 20-25% குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

தசரா மற்றும் தீபாவளி காலங்களில் வழக்கமாக ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் மத்தியில் வீடு வாங்குவதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும், ஆனால் இந்த முறை மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர் என ஹனு ரெட்டி ரியால்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரண் குமார் கூறினார். பெங்களூர் முக்கிய பகுதிகளில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது இதன் விலை உயர்ந்துள்ளது இதனால் மக்கள் வீடு வாங்குவதில் தாமதம் செய்து வருகின்றனர்.
பெங்களூருவின் தெற்கு பகுதிகளான எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள ஐடி பூங்காக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அரசின் சமீபத்திய கொள்கை மாற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிச்சயமின்மை ஆகியவை வீடு வாங்குபவர்கள் மத்தியில் தயக்கத்தை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications