பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூன்று இடங்களிலும் விமான போக்குவரத்து துறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெங்களூரில் தற்போது செயல்படக்கூடிய கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியாவிலேயே பிஸியான ஒரு விமான நிலையமாக இருக்கிறது. இந்த சூழலில் பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. எனவே கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மூன்று இடங்களில் விமான நிலையம் கட்டுவதற்கான பகுதிகளாக தேர்வு செய்து தன்னுடைய பரிந்துரை கடிதத்தை கர்நாடக மாநில அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை அடுத்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் திங்கட்கிழமை அன்று கர்நாடகாவுக்கு வருகை தந்தனர். அப்போது கர்நாடக மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரிகளை சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையின் போது கர்நாடகாவில் விமான நிலையம் கட்டுவதற்கு ஏதுவாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. கனகாபுரா சாலையில் சுடஹள்ளி மற்றும் சோமனஹள்ளி ஆகிய பகுதிகளிலும் நீலமங்களா மற்றும் குனிகல் சாலையிலும் பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான இடங்களாக இருக்கும் என மாநில அரசு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பி இருந்தது.
இந்த மூன்று இடங்களை தான் தற்போது விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களின் இந்த பயணத்தின் போது இந்த பகுதிகளில் எல்லாம் விமான நிலையம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கமாக தந்துள்ளனர். இந்த பகுதிகளில் நில அமைப்பு எப்படி இருக்கிறது, 10 ஆண்டுகால காலநிலை அறிக்கை, சாலை மற்றும் ரயில் , மெட்ரோ இணைப்பு, பெங்களூரின் மையப்பகுதியில் இருந்து இந்த மூன்று இடங்களுக்கு எவ்வளவு தொலைவு இருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது.
விமான நிலைய ஆணைய அதிகாரிகள் 9ஆம் தேதி வரை கர்நாடகாவில் இருப்பார்கள் அப்போது இந்த இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை அவர்கள் நடத்த இருக்கின்றனர். இந்த பயணத்தை தொடர்ந்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மத்திய அரசிடம் தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரு இடத்தை தேர்வு செய்யும், இதனை அடுத்து மாநில அரசு அந்த இடத்தில் விமான நிலையத்தை கட்டுவதற்கான ஆய்வு அறிக்கையை தயார் செய்து அங்கே விமான நிலையத்தை கட்டமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரும்.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகத்திற்கும் ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்குள் 2033 ஆம் ஆண்டு வரை புதிதாக எந்த ஒரு விமான நிலையமும் அமையக்கூடாது என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications