பெங்களூரு: பெங்களூருவில் பிரம்மாண்டமான ஸ்கை டெக் (SKY DECK) எனப்படும் வான் தளம் அமைக்கப்படும் என கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் இது எங்கே அமையப் போகிறது என்கின்ற அப்டேட் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் Nandi Infrastructure Corridor Enterprises (NICE) சாலையில் வான் தளத்தை அமைக்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். 250 மீட்டர் உயரத்தில் இந்த வான் தளத்தை கட்டமைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறும் அவர் பெங்களூருவின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா பகுதியாக இது மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் பெங்களூருவில் மிகப்பெரிய வான் தளத்தை கட்டமைக்க அரசு முடிவெடுத்துள்ளது என்றார். "இந்த பிரம்மாண்டமான கட்டமைப்புக்கு 25 ஏக்கர் அளவிலான நிலம் தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில் நாங்கள் NICE சாலைக்கு அருகே இந்த வான் தளத்தை கட்டமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு பெங்களூர் நகரை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் , இருந்தாலும் பொருத்தமான இடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடக்கூடிய நிலமானது நைஸ் சாலை பிரமோட்டர்கள் வசம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நைஸ் சாலை பிரமோட்டர்கள் 200 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே அவர்கள் ஒப்படைக்கும் நிலத்தின் அடிப்படையில் தான் பொருத்தமான இடம் தேர்வு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக அதிகாரிகள் வான் தளம் திட்டத்துக்காக மூன்று இடங்களை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. Hemmigepura, the Jnana Bharathi campus மற்றும் Kommaghatta ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய இருந்ததாக சொல்லப்படுகிறது. Hemmigepura பகுதியில் உள்ள 25 ஏக்கர் நிலம் இதற்கு பொருத்தமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
துறாஹல்லி வனப்பகுதி ,தலகட்டபுரா மெட்ரோ நிலையம் ஐந்து கிலோ மீட்டர் ஆகியவை அருகே இருப்பதால் இது பொருத்தமான இடமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் பெங்களூரு நகரில் அமைய இருக்க கூடிய இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு இது சிக்கலை ஏற்படுத்தலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மாநில அரசு இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட சில இடங்களுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications