தமிழ்நாடு அரசு ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டு வரும் இதேவேலையில் கர்நாடக அரசு பெங்களூர் நகரை ஒட்டி 2வது விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என திட்டமிட்டு, இதற்கான நிலத்தைத் தேடி வருகிறது. இந்த பணியில் தற்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
பெங்களூருவுக்கு இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்கும் கர்நாடக அரசின் திட்டங்கள் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாகத் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன. கர்நாடக அரசு பல சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டபோதிலும், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள பிற விமான நிலையங்கள் மூலம் வான்வெளி ஏற்கனவே அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், சரியான இடத்தை தேர்வு செய்ய முடியாமல் கர்நாடக அரசு தவித்து வருகிறது.

இந்த பிரச்சினையைத் தீர்க்க, அரசாங்கம் சமீபத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரிவினர் இடைய பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனாலும், பெங்களூர் நகருக்கு மேலே உள்ள வான்வெளி ஏற்கனவே 360 டிகிரியிலும் பல விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், விமான போக்குவரத்தைப் பாதிக்காத புதிய விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாகக் கர்நாடக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உதாரணமாக எச்ஏஎல் நிறுவனம் பெங்களூர் முதல் கோயம்புத்தூர் வரையிலான வான்வெளியை தங்கள் ஆராய்ச்சி மற்றும் பிற விமான சோதனை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை பெங்களூர் முதல் ஹாசன் வரையிலான வான்வெளியைப் பயன்படுத்துகிறது, இதேபோல் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தேவனஹல்லிக்கு அப்பால் 30 கி.மீ தூரத்திற்குப் பெங்களூர் வான்வெளியைப் பயன்படுத்துகிறது.
இதனால் புதிய விமான நிலையம் அமைத்தால் அதற்கான வான்வெளி பகுதி இல்லாமல் உள்ளது. இதனால் எப்படியாவது பெங்களூருக்கு அருகில் 2வது விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக, கர்நாடக அரசாங்கம் இத்துறை அதிகாரிகளிடம் புதிய விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்குக் கிடைக்கக்கூடிய வான்வெளி இடங்களை அடையாளம் காண வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளது.
கர்நாடக அரசு பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடங்களின் பட்டியல் இதுதான், நெலமங்கலம், குனிக்கல், ஹரோஹள்ளி, தோப்பேஸ்பெட், கோரட்டகிரி, தும்கூர், ஹுலியுருதுர்கா மற்றும் மலவல்லி ஆகிய பகுதிகள் அடங்கும்.
இந்த வானவெளி பிரச்சினையைத் தீர்க்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவற்றின் உதவியைக் கர்நாடக அரசு நாடியுள்ளது. பெங்களூரில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்குவது மூலம் ஏற்கனவே உள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைத் குறைத்து, இப்பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் விமானப் பயணத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும்


Click it and Unblock the Notifications