பெங்களூர்: இந்தியாவில் விமானங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெரு நகரங்களில் எல்லாம் இரண்டாவது விமான நிலையத்திற்கான தேவை வந்துவிட்டது. அந்த வகையில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் ஐடி நிறுவனங்களின் தலைநகரமாக இருக்கக்கூடிய பெங்களூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் உண்டாகி இருக்கிறது.
இந்த விமான நிலையத்தை தங்கள் தொகுதியில் தான் அமைக்க வேண்டும் என கர்நாடகா மாநில அமைச்சர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தன்னுடைய சொந்த தொகுதியான கனகபுராவில் தான் பெங்களூரின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய வேண்டும் என கூறி வருகிறார்.

எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகிலேயே இருப்பதால் கனகபுரா பகுதி தான் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கு சரியான இடமாக இருக்கும் என சிவகுமார் தொடர்ந்து கூறி வருகிறார்.
இவர் இதுவரை எட்டு முறை கனகபுரா தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்த பகுதியில் விவசாயிகள் யாரும் அவசரப்பட்டு நிலங்களை விற்று விட வேண்டாம் உங்கள் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர போகிறது, சில காலம் வரை பொறுத்திருங்கள் என அவர் தொடர்ந்து தொகுதி மக்களுக்கு கூறி வருகிறார். இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை தன்னுடைய தொகுதியில் அமைத்தே ஆக வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பது தெரிய வருகிறது.
அதே வேளையில் கர்நாடகா உள்துறை அமைச்சரான பரமேஸ்வராவும் தன்னுடைய சொந்த ஊரான திமகுரு பகுதியில் விமான நிலையத்தை நிறுவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இது கர்நாடக மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் பாட்டிலிடம் தான் பேசி இருப்பதாகவும் திமகுரு பகுதியில் இரண்டு இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தையும் கண்டறிந்து தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதாவது தன்னுடைய தொகுதியில் விமான நிலையம் அமைக்க ஏதுவாக 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் தயாராக இருக்கிறது என உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியுள்ளார். பெங்களூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கிறது என்பதால் இது தான் பொருத்தமான இடம் என அவர் கூறியுள்ளார். இங்கே விமான நிலையத்தை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அமைக்க முடியும் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசு பெங்களூர் நகரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஐந்தாயிரம் ஏக்கர் வரையிலான நிலம் தேவைப்படுவதாக அம்மாநில அரசு கூறுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக பிஸியான விமான நிலையமாக பெங்களூர் விமான நிலையம் தான் இருக்கிறது. எனவே இரண்டாவது விமான நிலையத்திற்கான தேவை வந்துவிட்டது என கர்நாடக அரசு கூறி வருகிறது .
இருந்தாலும் இது எந்த இடத்தில் அமையும் என்பதில் தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. உள்துறை அமைச்சரும் துணை முதலமைச்சரும் தங்கள் தொகுதியில் இது அமைய வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் துணை முதலமைச்சர் சிவகுமார் கூறக்கூடிய இடத்தில் 5000 ஏக்கர் வரையிலான நிலம் கிடைப்பது கடினம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் கூடிய விரைவில் முதலமைச்சர் சித்தராமையா எந்த இடத்தில் விமான நிலையம் அமையும் என்பதை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications