நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆள் பேர் தெரியாத நபர்களிடம் சிக்கி மக்கள் லட்சக்கணக்கான பணத்தை ஏமாந்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் பெங்களூரைச் சேர்ந்த நபருக்கு நடந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தினேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) டேட்டிங் அப்ளிகேஷனில் பார்ட்னரைத் தேடும் பொது ரூ. 50 லட்சத்தை இழந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தினேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தனது புகாரில் 48 வயதான தினேஷ் ஜூன் மாதம் Happn என்ற டேட்டிங் அப்ளிகேஷனில் ஸ்ருதி மேனன் என்ற பெயரில் தன்னை ஒரு பெண் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இருவரும் அதன் பிறகு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதி தினேஷ் மீது தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, திருமணத்திற்கு உறுதியளித்துள்ளார். பின்னர் ஒரு போர்டல் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி ஸ்ருதி வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் தினேஷ் 40,000 ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதற்கு உடனடியாக 50,000 ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளார். இதனால் உற்சாகமடைந்த அவர் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு கணக்குகளில் இருந்து ரூ.50,00,000 முதலீடு செய்துள்ளார்.
"மோசடி செய்தவர்கள் வழங்கிய ரூபால் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் இருந்த வங்கி கணக்கிற்கு முதலில் 40,000 ரூபாயை அனுப்பினேன். சில நிமிடங்களில் 50,000 ரூபாயாக என்னிடம் திருப்பிக் கொடுத்தார்கள்", என்று தினேஷ் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிக வருமானம் வரும் என்ற நம்பிக்கையில் கூடுதல் முதலீடுகளையும் செய்துள்ளார். தனது காப்பீடுகளில் இருந்து அதற்காக பணத்தை எடுத்துள்ளார். அது மட்டுமின்றி வங்கியிலும் கடன் வாங்கியுள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் போர்ட்டலில் அவருடைய பெயரில் ரூ.73 லட்சம் வருமானம் பெற்றதாகக் காட்டியுள்ளது. ஆனால், பணத்தை எடுக்க முயன்றபோது, கட்டணம் மற்றும் வரியாக ரூ.32 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
"ஆனால் நான் அவர்களுக்கு மேலும் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். பின்னர் முழு செயல்முறையையும் மோசடிதான் என்பதை அறிந்தேன். நான் அதன்பிறகு சைபர் ஹெல்ப்லைன் நம்பரான 1930-ஐ அழைத்து புகார் செய்தேன்", என்று தினேஷ் கூறியுள்ளார். மோசடி குறித்து புகார் அளித்த போதிலும் ஸ்ருதி மேலும் அவரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெறுவதற்கு ரூ.8 லட்சம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
ஸ்ருதி கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், அவர்களது வீடியோ அழைப்புகளின் போது சரளமாக கன்னடத்தில் பேசியதாகவும் தினேஷ் குறிப்பிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 318 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாரென்றே தெரியாமல் இதுவரை பார்த்திராத மனிதர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய தொகையை ஏமாறுகின்றனர் என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.


Click it and Unblock the Notifications