பெங்களூருவில் ஒரு பொறியாளராக 9 ஆண்டுகள் வாழ்க்கையை கழித்த சையத் ஃபராஸ் என்பவர், ஒரு நாள் திடீரென அனைத்தையும் உதறிவிட்டு, தனது சொந்த மாநிலமான பீகாருக்கு திரும்ப முடிவு செய்தார். "நான் பெங்களூருவில் நிரந்தரமாக தங்கிவிட்டால், பீகார் என் நினைவுகளில் மட்டுமே இருக்கும், என் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்காது என்பதை புரிந்துகொண்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.
சொந்த ஊர் திரும்பியதும், அவர் விரைவில் மீண்டும் பெங்களூரு சென்று விடுவார் என்று முதலில் வீட்டில் விருந்தாளியாகவே கருதப்பட்டார். இதற்கிடையே, வீட்டில் இருந்தபடியே சில்லறை வர்த்தகம், ஈவென்ட் மேனேஜ்மென்ட் என பல தொழில்கள் செய்தார். ஆனால், அவருக்கு தோல்வியே கிடைத்தது.

பின்னர், 'ஷீ ஃபுட்ஸ்' (Shhe Foods) என்ற உணவு பதப்படுத்தும் ஸ்டார்ட் அப்பை பாட்னாவில் தொடங்கினார். பீகாரின் மிகவும் பாரம்பரியமான பயிரான மக்கானா (தாமரை விதை)-ஐ உலகச் சந்தைக்கு எடுத்துச் செல்வதே இதன் நோக்கம். ஆரம்பத்தில் ஒரு சிறிய வாடகை அறையில் ரூ.3 லட்சம் முதலீட்டில் இருவர் தொடங்கிய இந்த முயற்சி, தற்போது 10,000 சதுர அடி தொழிற்சாலை, 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பிராண்டுகள் எனப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
நவம்பர் 2021ஆம் ஆண்டில் நிறுவனம் தொடங்கப்பட்டபோது, மக்கானா இப்போது உள்ளதை போல ஒரு 'சூப்பர்ஃபுட்' ஆக பிரபலமாகவில்லை. விலை நிலைத்தன்மை இல்லாமல் இருந்ததால், விவசாயிகள் சாகுபடியை கைவிட்டனர். "இந்தத் துறையில் நம்பகத்தன்மை இல்லை. விவசாயிகளுக்கு நிரந்தர வாங்குபவர்கள் இல்லை, நிறுவனங்களுக்கு நம்பகமான சப்ளை இல்லை" என்று ஃபராஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இந்தச் சவாலை எதிர்கொள்ள, மதிப்பு சங்கிலியை முறைப்படுத்த முடிவு செய்தனர். சந்தைப்படுத்துதலுக்குப் பணமில்லாததால், பிற பெரிய பிராண்டுகளுக்கு அவர்களின் பெயரில் மக்கானாவை சப்ளை செய்யும் B2B White Labelling முறையை பயன்படுத்தினர். தங்கள் ரோபோடிக்ஸ் அறிவைப் பயன்படுத்தித் தாமே உருவாக்கிய இயந்திரத்தின் மூலம், ரூ.4 லட்சம் மதிப்பிலான முதல் பெரிய ஆர்டரை, இரவும் பகலும் உழைத்து சரியான நேரத்தில் டெலிவரி செய்தனர்.
ஆர்டர்கள் அதிகரித்ததால், 2022 இறுதியில் மத்திய அரசின் PMFME திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் கடன் பெற்றனர். அதே ஆண்டு, ஒரு ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து ரூ.15 லட்சம் நிதியையும் திரட்டினர். இந்த நிதியைக் கொண்டு ஒரு சிறிய உற்பத்தி யூனிட்டை அமைத்து, உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினர்.
தற்போது, 2025ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2.5 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது மாதம் ரூ.1.5 கோடி சராசரி வருவாய் ஈட்டும் 'ஷீ ஃபுட்ஸ்', அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளது. 2,500 விவசாயிகளுடன் நேரடி ஒப்பந்தம் செய்ததால், விலை உறுதியானது.
இதனால் சாகுபடியைக் கைவிட்ட 70% விவசாயிகள் இப்போது மீண்டும் திரும்பி வந்துள்ளனர். 3 ஆண்டுகள் வெற்றிகரமான B2B சப்ளைக்குப் பிறகு, 2024 இறுதியில் மக்கான்ஸா உள்ளிட்ட தங்கள் சொந்த சில்லறை பிராண்டுகளை ஃபராஸ் அறிமுகப்படுத்தினார். 'ஷீ ஃபுட்ஸ்' இப்போது அமெரிக்கா, துபாய் உட்பட 11 இந்திய மாநிலங்கள் மற்றும் சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications