பெங்களூர் ரோடு என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது பயங்கரமான டிராபிக். அடுத்ததாக ரோட்டில் உள்ள குழிகள்.
பெங்களூரில் ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்துக்குச் சென்று வருவது என்றால் மகா கஷ்டமான வேலையாகும்.
இந்த நிலையில் 32 வயதான ஆரிப் முட்கல் இந்த மோசமான சாலைகளை சரி செய்வதற்காக சொந்த முயற்சிகளை மேற்கொண்டார். NoDevelopmentNoTax என்ற பிரசாரத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றுள்ளார் ஆரிப் முட்கல்.

பெங்களூரில் உள்ள மட்டமான சாலைகளை மாநகராட்சி சரி செய்யவில்லை என்றால் சொத்து வரியை மக்கள் கட்டக் கூடாது என்று ஆரிப் வலியுறுத்தினார்.
பெங்களூர் கிழக்குப் பகுதியில் உள்ள ஒஸா ரோட்டில் நிகழ்ந்த 2 விபத்துகளை ஆரிப் முட்கல் பார்த்தார். இதையடுத்து நகரில் உள்ள சாலைகளில் இருக்கும் குழிகளை அடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தார்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று ஒரு டெலிவரி ஏஜெண்ட் பைக்கில் செல்லும்போது குழிக்குள் சிக்கி விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எதிரே வந்த கார் மீது அவர் நேருக்கு நேராக மோதி கீழே விழுந்தார். மாண்டியாவை சேர்ந்த அந்த ஏஜெண்ட் தான் 9 பேர் கொண்ட அவரது குடும்பத்தில் சம்பாதிக்கக்கூடிய ஒரே ஆள்.

இந்நிலையில் ஆரிப் முட்கலும் வேறு சிலரும் சேர்ந்து சிட்டிசன் குரூப், கிழக்கு பெங்களூரு என்ற குரூப்பை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கினர். அவரும் அவரது குழுவினரும் தங்கள் கைக்காசைப் போட்டு சாலையை சரி செய்தனர். கையிலிருக்கும் பணம் தீர்ந்ததால் வேலைகள் நின்றுவிட்டன.
இதையடுத்து முட்கல் தனது சொந்த முயற்சியாக வங்கியில் பர்சனல் லோனாக ரூ.2.7 லட்சம் வாங்கினார். குழுவில் மற்றவர்கள் எல்லாம் ஆளாளுக்கு பணம் போட்டிருந்தனர். அதனால்தான் நானும் எனது பங்குக்கு இந்தக் கடனை வாங்கினேன் என்று முட்கல் கூறுகிறார்.
அந்த குழுவைச் சேர்ந்த மிதிலேஷ்குமார் என்பவர் கூறுகையில், NoDevelopmentNoTax என்ற பிரசாரத்தைத் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறை உயர் அதிகாரிகளுக்கு இல்லை.
அரசியல்வாதிகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். எனவே நாங்கள் சொத்துவரியைப் புறக்கணிக்கும் போராட்டத்தைத் தொடங்க வேண்டியிருந்தது என்றார்.
குழு உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து சாலைகளை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆரிப் முட்கல் தலைமையில் ஒரு மக்கள் போரட்டத்தை நடத்த குழுவினர் முடிவு செய்து கையோடு களத்தில் குதித்தனர்.


Click it and Unblock the Notifications