பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் புகழ்பெற்ற ஒரு மைதானமாக இருக்கிறது. பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன. பெங்களூருவின் அடையாளமாகவும் சின்னசாமி ஸ்டேடியம் இருக்கிறது.
இந்த சூழலில் பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தை போலவே புதிதாக ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டமைக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகே இருக்கக்கூடிய பொம்மச்சந்திராவில் இருக்கும் சூர்யா சிட்டி பகுதியில் இந்த புதிய மைதானம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 80 ஆயிரம் மக்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக இந்த கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மைதான கட்டமைப்பு பணிகள் முடிந்து விட்டால் இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமை இதற்கு கிடைக்கும். கடந்த ஐபிஎஸ் சீசனில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை அடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக மாநில முதலமைச்சர் பெங்களூருவில் 80 ,000 பேர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமான அதே வகையில் அனைத்து பாதுகாப்புகளும் நிறைந்த விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு 1,650 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது இந்தியாவின் பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானம் இருக்கிறது.

பொம்மசந்திரா மைதானம் பயன்பாட்டுக்கு வந்தால் இந்தியாவின் இரண்டாவது பெரிய மைதானமாக இருக்கும். தற்போதுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் 32,000 பேர் அமரும் வகையில் 17 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது போதுமானது அல்ல என அண்மையில் நீதிபதி ஜான் மைக்கேல் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலால் 11 பேர் இறந்ததை அடுத்து அங்கே எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் தான் கர்நாடக அரசு புதிய மைதானத்தை கட்ட இருக்கிறது. இது கிரிக்கெட் மைதானமாக மட்டுமல்லாமல் எட்டு இன்டோர் மற்றும் எட்டு அவுட் டோர் விளையாட்டு பகுதிகளை கொண்டிருக்கும். உடற்பயிற்சி மையங்கள் ,பயிற்சி மையங்கள், ஒலிம்பிக் போட்டி அளவிலான நீச்சல் குளங்கள், கெஸ்ட் ஹவுஸ், தங்கும் விடுதிகள் ஹோட்டல்கள் மற்றும் ஒரு கன்வென்ஷன் ஹால் உள்ளிட்டவை அடங்கியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகளும் சர்வதேச நிகழ்ச்சிகளும் பாதுகாப்பாக நடத்தும் வகையில் இது கட்டமைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications