விலங்குகளில் நன்றியுள்ள பிராணி என்றால் நாம் நாயைத் தான் சொல்லுவோம். மனிதர்களின் சிறந்த செல்லப்பிராணியாக நாய்கள் விளங்குகின்றன. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்ககள் வரை நாயுடன் உள்ளார்ந்த அன்பை பகிர்ந்து கொள்கின்றனர். அதற்கு சளைக்காமல் நாய்களும் தங்களது எஜமானர்களையும் உறவினர்களையும் உள்ளன்போடு நேசிக்கின்றன.
சமயங்களில் தனது குடும்பத்தாரை ஆபத்தான கட்டங்களில் உயிருக்குத் துணிந்து காப்பாற்றிய பல சம்பவங்களைக் கேட்டிருக்கின்றோம்.

அண்மையில் கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் ஒரு ஆட்டோக்காரர் தனது செல்ல நாயுடன் ஆட்டோவில் வலம் வந்த காட்சி இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது. இந்த காட்சி பல்வேறு தரப்புகளிலும் இருந்து கலந்து கட்டிய ரியாக்ஷன்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் கிட்டி ராக்ஸி ஸ்பார்ட்டா என்பவர் பகிர்ந்துள்ளார். விடியோவின் தொடக்கத்தில் அந்த ஆட்டோ டிரைவரின் மடியில் நாய் அமர்ந்துள்ளதை காணலாம். தொடர்ந்து ஆட்டோவின் போக்குக்கு ஏற்ப அந்த நாய் ஆட்டக்காரரின் மடியில் இருந்து ஆட்டோ ஹேண்டிலில் நன்கு பேலன்ஸ் செய்தபடி சவாரியை சந்தோஷமாக அனுபவித்தபடி சாலையோரம் பராக்கு பார்த்தபடி உள்ளது.
நாய்கள் உங்கள் தகுதியை பார்த்து பின்னால் ஓடிவருவதில்லை. அவற்றுக்குத் தேவை உங்களது இருப்பும் நேசமும். அப்படியொரு தூய உணர்வை இன்று நான் பார்த்தேன் என்று விடியோவில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த விடியோ ரீல் பதிவிடப்பட்டதிலிருந்து இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் மேல் வியூக்களும் 43,000 லைக்குகளும் குவிந்துவிட்டன.
விடியோ தலைப்பாக, "இன்றைக்கு நான் ஒரு ஆட்டோ டிரைவர் தனது செல்லப் பிராணியுடன் சவாரி செல்வதைப் பார்த்தேன்!...ஊபர் டிரைவர் சின்னு" என்று பதிவிடப்பட்டிருந்தது.
பெங்களூரில் இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடைபெறுகின்றன. இது நாய்களுக்கான சொர்க்கபுரி. இங்கு 10 வருடங்களாக வசித்து வருகின்றேன். கன்னடர்கள் தங்களது செல்லப் பிராணிகள் மீது செலுத்தும் அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும்.
இதைப் பார்த்து நாட்டின் மற்ற நகரங்களும் இதேபோல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதுவும் ஒருவகையில் கலாசாரம்தான். எப்படியோ இந்த உலகத்தில் மனிதநேயம் வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஒரு பதிவர் இந்த விடியோவுக்கு கமெண்ட் எழுதியுள்ளார்.
இது நிச்சயமாக பிரீமியம் 5 ஸ்டார் சேவை என்று ஒருவர் பாராட்டி பதிவிட்டு உள்ளார். இதேபோல் மற்றொரு பதிவர் இந்தப் புனித ஆன்மாவை இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டியுள்ளார்.
மனிதநேயத்துக்கு என்றைக்குமே மக்களிடையே வரவேற்பும் ஏற்பும் இருக்கும் என்பது இந்த சம்பவம் மற்றொரு எடுத்துக் காட்டாகும்.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications