பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிலும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முன் கூட்டியே பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பயன்பாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரை கட்டுமான பணிகள், தோட்டப்பணிகள் மற்றும் கார்களை கழுவுவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரை கொண்டு வாகனங்களை கழுவுவது, தோட்டங்களுக்கு தண்ணீர் விடுவது, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மால் மற்றும் சினிமா தியேட்டர்களில் குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலைகளை சுத்தம் செய்வது மற்றும் சாலை கட்டுமான பணிகளுக்கும் குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோல யாரேனும் குடிநீரை வீணடிப்பதை பார்த்தால் உடனடியாக 1916 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மார்ச் மாதம் இருந்து மே மாதம் வரையிலான காலம் கோடைகாலமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பெங்களூரு மாநகரில் கோடைகாலத்தில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் முன்கூட்டியே தண்ணீர் சிக்கன நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.4 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய பெங்களூரில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது, போதிய மழையும் பெய்யவில்லை எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் குறிப்பாக குடிநீரை வீணடிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
பெங்களூரில் குடிநீர் வழங்கல் வாரியமும் இந்திய அறிவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் பெங்களூருக்கு உட்பட்ட 80 வார்டுகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் 5 மீட்டர்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் நிலத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பெங்களூரு, ஒயிட் பீல்டு உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் நிலத்தடி நீரையே நம்பி இருக்கின்றன. எனவே இங்கே நிலத்தடி நீர்மட்டம் குறையும் போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications