பெங்களூர்-க்கு கார்டன் சிட்டி என்ற பெயர் இருந்தாலும் ஐடி சிட்டி, ஸ்டார்ட்அப் சிட்டி போன்ற பெயர்கள் பொருத்தமாக உள்ளது. ஒட்டுமொத்த பெங்களூரும் ஐடி சேவை, டிஜிட்டல் சேவை துறையில் பணியாற்றும் ஊழியர்களால் நிரம்பி வழிகிறது. இதனுடன் டிராபிக் பிரச்சனையும் பெங்களூர் நகரையும், பெங்களூர் மக்களையும் வாட்டி வதைக்கிறது. பெங்களூர் டிராபிக்கை சமாளிக்க அரசும், காவல் துறையும் பல நடவடிக்கை எடுத்தாலும் தீர்ந்தபாடு இல்லை.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட Wingify மற்றும் Nintee (மூடப்பட்ட ஸ்டார்ட்அப்) நிறுவனங்களை நிறுவிய பராஸ் சோப்ரா செய்த பதிவு தான் பெங்களூர் மக்கள் மத்தியிலும், ஸ்டார்ட்அப் - ஐடி ஊழியர்கள் மத்தியில் உலா வருகிறது. அப்படி என்ன பதிவு செய்தார் என்பது தானே உங்களின் கேள்வி. வாங்கப் பார்ப்போம்.

இந்தியாவின் மற்ற நகரங்களை விட அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரமாக உள்ளது பெங்களூர். இதேவேளையில் நாட்டின் பிற நகரங்களைக் காட்டிலும் பெங்களூர் வேகமாக நகரமயமாகியுள்ளது, இதுவே டிராபிக் பிரச்சனைக்கு முக்கியமான காரணமாகும். பெங்களூரில் தற்போது முக்கிய பகுதியாக இருக்கும் பலவற்றும் முறையாகத் திட்டமிடாமல் உருவாகியுள்ளது.போதுமான பொது போக்குவரத்து வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களாலும் பெங்களூர் மக்கள் ஒரு நாளில் பெரும் பகுதி நேரத்தை டிராபிக்கில் செலவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரை Wingify ஸ்டார்ட்அப் நிறுவனர் பராஸ் சோப்ரா, பெங்களூர் டிராபிக்-ஐ சமாளிக்கச் சீனாவில் இருக்கும் ஒரு சேவையைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார்.
அதில் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டவர்களைக் காப்பாற்ற ஒரு சேவை உள்ளதாம், 60 டாலர் செலுத்தினால் போதும், இருவர் டிராபிக்கில் நீங்கள் சிக்கிக்கொண்டு இருக்கும் இடத்திற்கே வந்து பைக்கில் உங்களைப் பத்திரமாக அழைத்துச் செல்வார். மற்றொருவர் உங்கள் காரை வீட்டிற்கோ அல்லது நீங்கள் சொல்லும் இடத்திற்கு ஓட்டிச் செல்வார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக பராஸ் சோப்ரா "பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனர்களே, SaaS ஐடியாவை விட்டுவிட்டு இதை உருவாக்குங்கள்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
பராஸ் சோப்ராவின் இந்த ஐடியாவுக்கு நெட்டிசன்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் இது சாத்தியமில்லை என்று சிலர் கணித்துள்ளனர்.
"சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியா" என்று GoToGrowth நிறுவனத்தின் நிறுவனர் தேபோன்கர் எழுதியுள்ளார். எக்ஸ் பயனர் சங்கல்ப் "பெரிய நகரங்களுக்கான பெஸ்ட் ஸ்டார்ட்அப் ஐடியா இது" என்று கூறியுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் "இந்தியர்கள் பணத்தை கண்ணும்கருத்துமாக செலவு செய்பவர்கள், ரூ.1000 செலவு செய்து டிராபிக்கில் இருந்து வெளியேறுவதைக் காட்டிலும் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருப்பது சிறந்தது என யோசிப்பார்கள்" என்று கணித்துள்ளார்.
மற்றொருவர், "பெங்களூர் டிராபிக்கில் கார் மட்டுமல்ல நீங்கள் பைக்கிலும் சிக்கிக் கொள்வீர்கள்" என்ற உண்மையை எழுதியுள்ளார். இப்படி பலரும் பல விஷயங்களை எழுதியுள்ளனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications