இந்தியாவிலேயே அதிக அளவு வீட்டு வாடகை கொண்ட நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் , சிலிக்கான் வேலி என்று புகழ்பெற்றிருக்கிறது பெங்களூரு. இதன் காரணமாக பெங்களூருவில் ரியல் எஸ்டேட் மதிப்பும் அதிகம். குறிப்பாக முதல்முறையாக வேலை கிடைத்து பெங்களூரு செல்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது.
கிட்டத்தட்ட இவர்களின் ஒரு மாத சம்பளத்தையே அங்கு இருக்கக்கூடிய வீட்டு உரிமையாளர்கள் வாடகையாக கேட்கிறார்கள். வாடகையே இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டிற்கான டெபாசிட் பணம் 10 லட்சம் ரூபாயை கடந்து விடுகிறது. ஏராளமான இளைஞர்கள் பெங்களூருவில் வாடகை வீடு கிடைப்பதில்லை, அநியாயமாக வீட்டு வாடகை நிர்ணயம் செய்கிறார்கள், வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிடுவதை காண முடிகிறது.

பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதி இல்லை, போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கிறது, எந்த ஒரு வசதியுமே இல்லாத இடத்தில் வீட்டு வாடகை மட்டும் இவ்வளவு அதிகமாக வைத்திருப்பது நியாயமா என ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் எழுப்பியுள்ள கேள்வி பெங்களூருவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் நிறைந்து இருக்கக்கூடிய பகுதியில் வீட்டு வாடகை பல மடங்கு அதிகம்.
அண்மையின் லுக்பா மல்கோத்ரா என்ற பெண் கோரமங்கலா பகுதியில் வாடகைக்கு வீடு தேடி இருக்கிறார். இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு வாடகை வீடு கிடைத்திருக்கிறது. வாடகை குறித்து விசாரிக்க சென்றபோதுதான் அவருக்கு ஒரு உண்மை சென்றபோது. வீட்டின் வாடகை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தாராம்.
இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் வாடகை , கோரமங்களாவில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது, சாக்கடைகள் திறந்து கிடக்கின்றன, சாலைகள் சேதம் அடைந்து கிடக்கின்றன இப்படி எந்த வசதியுமே இல்லாத ஒரு ஏரியாவுக்கு இவ்வளவு அதிக வாடகையா வெட்கமாக இல்லையா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பெங்களூருவிலேயே அதிகபட்ச வாடகை கொண்ட பகுதியாக கோரமங்கலா தான் திகழ்கிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பிடித்தமான அலுவலகங்கள், உணவகங்கள் ,ஷாப்பிங் மால்கள் இந்த ஏரியாவில் நிறைந்திருக்கின்றன. இதனால் தான் இந்த ஏரியாவில் டிமாண்ட் அதிகம் எனவே வாடகையும் அதிகம். ஆனால் இந்த பெண் முன்வைக்கக்கூடிய கேள்வி நியாயமானது தான் என பலரும் கருத்து பதிவிட்டு இருக்கின்றனர்.
இவ்வளவு வாடகை செலுத்தினாலும், அன்றாடம் சேதமடைந்த சாலையில் தான் நாங்கள் பயணம் செய்கிறோம், போக்குவரத்து நெரிசலில் பல மணி நேரம் காத்திருக்கிறோம் என ஏராளமானவர்கள் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வீட்டு வாடகை என்பது பெங்களூருவில் ஒரு திட்டமிடப்பட்ட கொள்ளை என ஒரு நபர் பதிவு செய்திருக்கிறார். தேவை அதிகமாக இருப்பதாக கூறி வீட்டு உரிமையாளர்கள் நம்மை சுரண்டுகிறார்கள் என பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications