பெங்களூரு: இந்தியாவின் ஐடி நகரமாக விளங்கும் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் ஒன்று தான் கோரமங்களா, இந்த பகுதியில் உள்ள ஒரு 2 BHK வீட்டில் வசிக்கும் ஒரு பெண் வீட்டை காலி செய்ய திட்டமிட்டுள்ளதாக எக்ஸில் பதிவிட்டார். இந்த பதிவில் வீட்டு வாடகையும், அட்வான்ஸ் தொகையும் குறிப்பிட்டு உள்ளார் அந்த பெண். இந்த விபரம் தான் மொத்த இணைய வாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் எக்ஸ் பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் தெறிக்க விட்டு உள்ளனர். பொதுவாகவே பெங்களூர் வீட்டு வாடகை குறித்து மக்கள் மத்தியில் அதிகப்படியான விவாதம் நடக்கும் வேளையில் இந்த பதிவு டிரெண்டாகி வருகிறது.
லீஷா அகர்வால் என்ற பெண் டிவிட்டரில் செய்த பதிவில் "நாங்கள் தற்போது வசிக்கும் கோரமங்களாவில் உள்ள 2 BHK வீட்டிலிருந்து வெளியேற உள்ளதால், இந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளோம். எனவே இந்த வீட்டில் குடியேற விரும்புபவரைத் தேடுகிறோம்! இந்த வீட்டை (அனைத்து பர்னிச்சர் சேர்த்து) தற்போது இருப்பது போலவே வாடகைக்கு எடுத்துக்கொள்ள விரும்புபவரைத் தேடுகிறோம். வாடகை 43,000, வைப்புத் தொகை 2.5 லட்சம், அனைத்து பர்னிச்சர்-களுக்கும் கூடுதல் கட்டணம். விவரங்களுக்கு DM செய்யவும்!" என்று அவரது முதல் ட்வீடில் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து லீஷா செய்த அடுத்த பதிவில் "ஒரு அறையில் உள்ள பால்கனி அழகாக இருக்கும், இந்த வீடு அமைந்துள்ள இடம் விப்ரோ சிக்னலுக்கு அருகில் மற்றும் சமையலறை நேர்த்தியாகச் சிறிய அளவில் திறந்த நிலையில் இருக்கும். இளம் தம்பதிகளுக்கு சிறந்தது IMO, 10/10 பொருத்தம் பக்காவாக இருக்கும். திருமணம் செய்தவர்களாக இருக்க வேண்டும், செல்லப்பிராணி இருக்க கூடாது போன்ற முட்டாள்தனமான ரூல்ஸ் இல்லை" என்று கூடுதல் விவரங்களைச் சேர்த்துள்ளார்.
இந்த பதிவு இதுவரையில் சுமார் 2.12 லட்சம் பேர் பார்த்துள்ளனர், இதில் அதிகப்படியான மக்கள் வீட்டின் ரூ.2.5 லட்சம் வைப்புத் தொகையும், 45 ரூபாய் வாடகை தான் மிகவும் முக்கியமாக விவாதித்து வருகின்றனர். ஒரு பயனர், "நல்ல வீடு. ஆனால் கோரமங்களாவில் உள்ள ஒரு வீட்டிற்கு 2.5 லட்சம் வைப்புத் தொகை? இதற்காகக் கள்ள சந்தையில் என் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய வேண்டும்" என்று கமெண்ட் செய்துள்ளார்.

ஆனால் இந்த பதிவுக்கு லீஷா அகர்வால் நேர்மையாகவும், பக்குவமாகவும் பதிலளித்தார், "இது பைத்தியக்காரத்தனம்தான், ஆனால் அதுதான் இன்றைய நிலைமை. பெங்களூரில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன், வைப்புத் தொகை எப்போதும் மோசமானதாகத் தான் இருந்தது." இப்படி பல கமெண்ட்களுக்கு பல விதமான பதில்களைத் தொடர்ந்து லீஷா பதில் அளித்து வருகிறார்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் பதிவிட்ட 24 மணிநேரத்தில் வீட்டை 5 பேர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் கட்டாயம் வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, வீட்டை வேறு யாருக்கும் கொடுத்துவிட வேண்டாம் என லீஷா அகர்வாலிடம் கெஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த அப்பார்ட்மென்ட் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது, டிவிட்டருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் கொரோனா தொற்றுக்குப் பின்பு லாக்டவுன் முடிந்து மக்கள் சொந்த ஊரைவிட்டு ஐடி நகருக்கு குடியேறிய நாளில் இருந்து வாடகை மோசமாக உயர்ந்துள்ளது. 10000 ரூபாய் அளவில் இருந்த வீடுகளுக்கு தற்போது 20000 முதல் 25000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதனால் பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அதிகப்படியான வாடகையைச் சமாளிக்க முடியாமல், நகரின் மையப் பகுதியில் இருந்து, வாடகைக்கு மலிவானதாக இருக்கும் நகரின் புறநகர்ப் பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வொயிட்ஃபீல்ட், சர்ஜாபுரா, அட்டிபெல்லி போன்ற புறநகர்ப் பகுதிகளில் வாடகைகள் குறைந்தபட்சம் 15-20 சதவிகிதம் குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications