ஹெல்த் இன்சூரன்ஸ் நிதி திட்டமிடலுக்கு அவசியமான ஒன்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மருத்துவச் செலவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அனைவரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைப்பது முக்கியம். ஆனால் பலருக்கும் எழும் சந்தேகம் என்னவென்றால் எந்த வயதில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும்? என்பதுதான். நிபுணர்களின் கூற்றுப்படி வயதை பாராமல் முடிந்தவரை விரைவாக ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது.
குறைந்த பிரீமியம்: உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் பெரும்பாலும் உங்கள் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. பொதுவாக இளமையாக இருக்கும் போது பலரும் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பிரீமியம் குறைவாக இருக்கும் பாலிசிகளை வாங்கலாம். அதுவே வயதாகும்போது உடல்நல பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிக பிரீமியங்களை கொண்ட பாலிசிகளை வாங்க வேண்டும்.

விரிவான கவரேஜ்: நீங்கள் இளம் வயதில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும்போது, விரிவான கவரேஜைப் பெற வாய்ப்புள்ளது. பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு, காத்திருப்பு காலம் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஏற்கனவே உள்ள சுகாதாரப் பிரச்சனைகளுக்கான நன்மைகளை உடனடியாக கோர முடியாது. இந்த காத்திருப்பு காலம் பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கும்.நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது பாலிசியை வாங்கினால், இந்த காத்திருப்பு காலம் கடந்து செல்லும் வாய்ப்பு அதிகம். இதனால் கிளைம் செயல்முறை எளிதாக இருக்கும்.
நிதிப் பாதுகாப்பு: வயதைப் பொருட்படுத்தாமல் உடல்நலப் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக எழலாம். எனவே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் நீங்கள் உங்கள் சேமிப்பை பயன்படுத்தவோ அல்லது மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட கடன் வாங்கவோ தேவையில்லை.
இதுவரை நீங்கள் இன்னும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் மிகவும் விரைவாக தொடங்குவது சிறந்தது. அதுவே நீங்கள் 40 அல்லது 50 வயதுகளில் இருந்தால் வெவ்வேறு பாலிசிகளை ஒப்பிட்டு பார்த்து உங்கள் தேவைக்கு ஏற்ற கவரேஜ் வழங்கும் பாலிசிகளை தேர்வு செய்யலாம்.
மூத்த குடிமக்கள்: 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இந்தத் திட்டங்கள் வயதானவர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. பிற்கால வாழ்க்கையில் பொதுவான நோய்களுக்கு ஏற்ப பாதுகாப்பை இந்த திட்டங்கள் வழங்குகின்றன. பிரீமியங்கள் அதிகமாக இருந்தாலும் கவரேஜ் குறைவாக இருந்தாலும் ஓய்வு காலத்தில் சுகாதாரச் செலவுகளை நிர்வகிப்பதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மிக மிக முக்கியம்.


Click it and Unblock the Notifications