இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டப்படும் வேளையில் சகோதரிக்கு என்ன பரிசு வழங்கலாம் என யோசித்து காத்துக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு, ஒரு சூப்பர் ஐடியா. இந்த ஆண்டில் ஏன் வித்தியாசமாக பங்குகளை வாங்கி பரிசளிக்க கூடாது. ஆம் , இந்த மூன்று நிறுவனங்களின் பங்குகளை பரிசாக வழங்கினால் பின்னாளில் அவர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.
அடுத்த ஓராண்டு காலத்திற்குள் 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் தரக்கூடியவையாக இருக்கும் என மாஸ்டர் கேப்பிடல் சர்வீசஸ் நிறுவனம் பரிந்துரை செய்துள்ள மூன்று பங்குகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லார்சன் & டர்போ : பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற எல்&டி நிறுவனம் உள்கட்டமைப்பு, ஹைட்ரோ கார்பன், மின்சாரம், பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் சேவை வழங்கி வருகிறது .இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவன பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 32 சதவீதம் லாபத்தை தந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 3,568 ரூபாய் ஆகும்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸை பொருத்தவரை வருவாய் அடிப்படையில் நாட்டின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களுக்குள் இடம் பிடித்திருக்கிறது. இந்த நிறுவனம் 60 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டிஜிட்டல், இன்ஜினியரிங், கிளவுட் மற்றும் ஏஐ சொல்யூஷன் பிரிவுகளில் நிதி, உற்பத்தி, அறிவியல், ரீடைல், டெக்னாலஜி மற்றும் டெலிகாம் துறைகளில் கால் பதித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு சுமார் 40% வளர்ச்சியடைந்துள்ளது. தற்போதைய சூழலில் இதன் ஒரு பங்கின் மதிப்பு 1,668 ரூபாய் என இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ்: டாடா குழும பங்குகளிலேயே தற்போது வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனம் சுமார் 75% லாபத்தை ஈட்டி உள்ளது. தற்போதைய நிலையில் இதன் ஒரு பங்கு மதிப்பு 1998 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை ஆட்டோமொபைல்ஸ் குறிப்பாக பயணிகள் மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்து. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் ஜாக்குவார் அண்ட் லேண்ட்ரோவர் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
இது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருக்கிறது.
இந்த நிறுவனத்தை பொறுத்தவரை சிறந்த விநியோக சங்கிலி கொண்டிருப்பதாக கூறும் முதலீட்டு நிபுணர்கள் கண்டிப்பாக இந்த நிறுவன பங்கினை தங்கள் சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் பரிசாக வழங்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications