உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை எக்கச்சக்கமாக பணிநீக்கம் செய்திருந்தாலும், ஒரு நிறுவனத்தின் பணிநீக்கம் யாராலும் மறக்க முடியாது.
அமெரிக்காவில் பெட்டர்.காம் என்னும் ரியல் எஸ்டேட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனத்தின் சிஇஓவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விஷால் கார்க் 2021 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 900 ஊழியர்களை வெறும் 3 நிமிட Zoom காலில் பணிநீக்கம் செய்த சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகள் உருவாக்கியது.

இந்த விஷால் கார்க் தான் தற்போது சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார். இந்த 900 ஊழியர்கள் பணிநீக்க சம்பவத்திற்குப் பின்பு பெட்டர்.காம் நிறுவனம் குறித்தும் விஷால் கார்க் குறித்தும் பிரபலமானது.
பெட்டர்.காம் நிறுவனத்தின் நிர்வாக குழு விஷால் கார்க்-ஐ வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு ஹெட்ஜ் பண்ட் மேனேஜரான டேனியல் லூவிஸ்-ஐ ஆகஸ்ட் மாதத்தில் அதன் நிர்வாக குழுவில் புதிதாக இணைத்தது. இதன் பின்பு ஒரு வாரத்தில் விஷால் கார்க் வெளியேற்றப்பட்டார்.
இவரை டிஸ்மிஸ் செய்ய பல குற்றச்சாட்டுகள் நிர்வாக குழுவால் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை தவிர அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் டிஸ்மிஸ் செய்ய வாக்கு அளித்தனர். இதன் விளைவாக விஷால் கார்க் வெளியேற்றப்பட்டார்.
கொரோனா காலத்தில் அமெரிக்க ரியல் எஸ்டேட் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தது, இதனால் விஷால் கார்க் தலைமையிலான பெட்டர்.காம் கண்மூடித்தனமாக ஊழியர்களை பணியில் அமர்த்தியது. 2021ல் மொத்த ரியல் எஸ்டேட் கதையும் மாறியதால் 900 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட வேண்டிய நிலை உருவானது. இதன் பின்பு பல மாற்றங்கள், பல திருத்தங்கள் கொண்டு வந்தாலும் பெட்டர்.காம் எவ்விதமான முன்னேற்றமும் அடையவில்லை.
2022ல் இருந்து இந்நிறுவனத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர் குறைந்துள்ளது, பங்கு மதிப்பு சுமார் 90 சதவீதம் வரையில் குறைந்தது. இது மட்டும் அல்லாமல் விஷால் கார்க்-ன் முன்கூடிய தீர்மானிப்பு போக்கு, மனநிலை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் நிர்வாக குழுவிடம் எழுந்தது. இதன் வாயிலாக வெளியேற்றப்பட்டார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெட்டர்.காம் நிறுவனத்தின் நிறுவனரும் விஷால் கார்க் தான். தன்னுடைய சொந்த நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டது பெரும் வருத்தத்திற்குரிய விஷயம். இதேபோல் 2021 பணிநீக்க சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மதிப்பு இழந்தது தான் அதன் பங்கு விலை 90 சதவீதம் வரையில் சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அடுத்தாக விஷால் கார்க் தான் டிஸ்மிஸ் செய்யப்பட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்க முன்னணி சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளார், மேலும் நிறுவனம் லாபத்திற்குத் திரும்பும் வரையில் வருடம் 1 டாலர் சம்பளத்தில் பணியாற்றவும் தான் தயார் என்றும் பெட்டர்.காம் நிர்வாக குழுவிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications