சென்னை: 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில தொழிற்சங்கங்கள் சார்பாக பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொது வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
பொது வேலைநிறுத்தம் : நாட்டில் படிப்பை முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொது நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் சங்கம் , காப்பீட்டு துறை ஊழியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

தமிழ்நாட்டில் யாரெல்லாம் ஆதரவு?: தமிழ்நாட்டில் இந்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,காங்கிரஸ், மதிமுக , விடுதலை சிறுத்தைகள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோவும் ஆதரவளித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் போராட்டத்தின் தாக்கம் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் போராட்டம் நடந்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
வழக்கம் போல பேருந்துகள் இயக்கம்: திமுகவின் தொழிற்சங்கமான தொமுச-வை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் அரசு பேருந்து ஓட்டுனராக இருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் இந்த சங்கமும் பங்கேற்பதால் தமிழ்நாட்டில் பேருந்துகள் இயக்கப்படாது என சொல்லப்பட்டது. ஆனால் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் சென்னையில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை அதோடு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஓட்டுநர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறுகின்றனர்.

சென்னையில் நிலவரம் என்ன?: சென்னையில் இருக்கும் 32 பனிமனைகளில் இருந்தும் 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கு 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள் எந்த பாதிப்பும் இன்றி செல்ல முடிந்தது. சென்னையில் இயல்பு வாழ்க்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. சாலைகளில் வழக்கம் போல பேருந்துகள் இயங்குவதை காண முடிகிறது. முன்னதாக அரசு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் சம்பளம் பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றதா? : தமிழ்நாட்டை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஆட்டோக்கள் இயங்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் சென்னையில் வழக்கம் போலவே ஆட்டோக்களும் இயங்குகின்றன.
கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா?: வணிக சங்கத்தினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள் , வணிக நிறுவனங்கள் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications