சென்னை: நாடு முழுவதும் நாளை தொழிற்சங்கங்கள் சார்பாக மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு அரசு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
நாளை பொது வேலைநிறுத்தம்: மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளை செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருக்கின்றன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு யூனியன்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவதை கைவிட வேண்டும் , காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் , புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தான் இந்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

25 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பு: மத்திய அரசின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட நிதியுதவித் திட்டம் ஊழியர்களுக்கு உதவாமல் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என தொழிற்சங்கங்கள் விமர்சனம் செய்துள்ளன. இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜித் கவுர் தெரிவித்திருக்கிறார் .இதற்கிடையே நாடு தழுவி அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி மற்றும் காப்பீட்டு துறையும் கலந்து கொள்ளும் என அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்குமா?: தமிழ்நாட்டில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான சிஐடியு, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி, காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தொமுச வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் தமிழகத்தில் நாளை பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல நாளைய தினம் ஆட்டோக்கள் குறைவாக இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன .
பள்ளி , கல்லூரிகள் இயங்குமா?: பொது வேலை நிறுத்த போராட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்க இருப்பதால் நாளைய தினம் வங்கி, காப்பீடு ,தபால் சேவை, சுரங்கத்துறை, நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான துறைகளில் பணிகள் பாதிக்கப்படும் . ஆனால் இந்த போராட்டங்களால் காரணமாக பள்ளி கல்லூரிகள் செயல்படுவதில் எந்த பாதிப்பும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. எந்த மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகள் இயங்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
வங்கிகள் செயல்படுமா: வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் நாளை வங்கி பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருந்தாலும் வங்கிகளுக்கு விடுமுறை விதிக்கப்படுவதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும் வங்கிச்சேவைகள் பாதிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications