பிப்ரவரி 12 அன்று நாடு முழுவதும் பெரும் அளவிலான பொது வேலைநிறுத்தம் (Bharat Bandh) நடைபெற உள்ளகு. சுமார் 10 முக்கிய தொழிற்சங்கங்கள் இதற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 கோடி பேர் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் கொள்கைகள் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானவை என்று குற்றம்சாட்டி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து நடைபெறுகிறது என்பதால் நாடு முழுவதும் இதற்கு அதிகப்படியான ஆதரவு பெருகி வருகிறது.

அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாகவும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இந்த அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள், அணிவகுப்புகள், மறியல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி வங்கி, பங்குச் சந்தை, பள்ளிகள் நிலை என்ன?
வங்கிகள் பிப்ரவரி 12 அன்று மூடப்படுமா?
ரிசர்வ் வங்கி (RBI) இதுவரை வங்கிகள் மூடப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, பெரும்பாலான வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வேலைநிறுத்தம் பெரிய அளவில் நடைபெற்றால் சில இடங்களில் சேவைகள் பாதிக்கப்படலாம். பேங்க் ஆஃப் பரோடா போன்ற சில வங்கிகள் "அனைத்து கிளைகளும் சீராக இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அறிவித்துள்ளன.
பங்குச் சந்தை (Stock Market) மூடப்படுமா?
பிப்ரவரி 12 அன்று பங்குச் சந்தை, டெரிவேட்டிவ்ஸ், பாண்ட், கமாடிட்டி, ஃபாரெக்ஸ் உள்ளிட்ட எந்த சந்தையும் மூடப்படாது. BSE மற்றும் NSE ஆகியவை வழக்கம்போல திறந்திருக்கும். வர்த்தகம் சீராக நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா?
பல மாநிலங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக கேரளாவில் போராட்டம் பெரிய அளவில் நடைபெறும் என்பதால், ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்புகள் பங்கேற்பதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களில் நிலைமைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொது போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, சில தனியார் சேவைகள் பாதிக்கப்படலாம். எனவே, அவசர பயணங்கள் அல்லது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. இந்த போராட்டம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications