பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனது கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் கட்டமைப்பை பன்முகப்படுத்தும் முயற்சியில் முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைப் பெருமளவு வளைகுடா நாடுகளிடம் இருந்து வாங்குவது மூலம் பூர்த்தி செய்து வந்த நிலையில், கடந்த 3 வருடமாக அதாவது ரஷ்யா - உக்ரைன் போர் வெடித்த நாளில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இப்படி வாங்கும் அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியமும் ஒன்று.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாறும் காரணத்தாலும், டிரம்ப் இந்தியா மீது வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கும் வேளையில் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்ற இடத்தை தேடி வருகிறது. அதாவது குறைவான விலையில் தரம் நிறைந்த எண்ணெய்யை வாங்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் பாரத் பெட்ரோலியம் அர்ஜென்டினாவிலிருந்து முதன்முறையாக மெடானிடோ கச்சா எண்ணெய்யை (Medanito crude) வாங்கியுள்ளது. இந்த புகிய தர கச்சா எண்ணெய் கொள்முதல் மூலம் பாரத் பெட்ரோலியத்தின் சுத்திகரிப்பு செயல்பாடுகள் மேம்படும்.
முதல் கட்டமாக பாரத் பெட்ரோலியம் 1 மில்லியன் பேரல் மெடானிடோ கச்சா எண்ணெய் கார்ரோ, ஐரோப்பிய வர்த்தக நிறுவனமான மெர்குரியாவிலிருந்து வாங்கியுள்ளது. இது பிப்ரவரி மாதம் டெலிவரி செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் தரத்திற்கு இணையான ஒரு எண்ணெய் வகை தான் இந்த அர்ஜெண்டினா மெடானிடோ கச்சா எண்ணெய். இந்த எண்ணெய் பார்த் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்களில் செயலாக்கப்பட்டு, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டு சந்தையிலோ விற்கும்.
புதிய கச்சா எண்ணெய் தரங்களை ஆராய்வதன் மூலம், பார்த் பெட்ரோலியம் நிறுவனத்தின் வர்த்தகம் மேம்படும், அதேபோல் லாபத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கேப்லரின் தரவுகள், அக்டோபர் மாதத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதன்முதலில் சுமார் 420,000 பேரல் மெடானிடோ கச்சா எண்ணெய் ஆஸ்திரேலியாவின் ஜீலாங் சுத்திகரிப்பு நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறுகிறது. இதன் மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அர்ஜென்டினா கச்சா எண்ணெய் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications