இந்தியாவில் வாடகை ஆட்டோ, கார் உள்ளிட்ட சேவைகளுக்கான டிமாண்ட் எப்போதுமே அதிகம். ஒவ்வொரு ஆண்டும் வாடகை வாகனங்களுக்கான சந்தை 11% என்ற காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைகிறது. இப்போது இந்த சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் தான்.
இந்த தனியார் நிறுவன செயலிகளில் ஒரே தொலைவிற்கு வெவ்வேறு விதமான கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. அதுவும் பீக் அவர்களில் ரைடு புக் செய்தால் வழக்கத்தை விட கூடுதமான கட்டணம் காண்பிக்கும். வேறு வழி இல்லாமல் அதிக கட்டணம் செலுத்தி இந்த சேவைகளை பெறக்கூடிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அதற்கு ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. மத்திய அரசு தனியார் நிறுவன டாக்ஸி சேவை செயலிகளுக்கு சவால் விடும் வகையில் பாரத் டாக்ஸி செயலியை நாடு முழுவதும் பயன்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது.

வழக்கமான ஓலா, ஊபர் செயலிகளை விட இதில் 30 சதவீதம் வரை குறைவான கட்டணத்திலேயே வாடகை வாகனங்கள் கிடைக்கும் என மதிய அரசு உறுதி தந்துள்ளது. பொதுமக்கள் தங்களுடைய ஃபோன்களில் பாரத் டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களுக்கான ஆட்டோ ,கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை பதிவு செய்து கொண்டு பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் பாரத் டாக்ஸி செயலி கிடைக்கிறது.
முழுக்க முழுக்க ஓட்டுனர்களால் இயக்கப்படக்கூடிய ஒரு கூட்டுறவு அமைப்பு சார்ந்த செயலியாக தான் பாரத் டாக்ஸி செயல்படுகிறது. அதாவது வாகன ஓட்டிகள் தான் இதன் உரிமையாளர்கள். எனவே நாம் செலுத்தக்கூடிய மொத்த பணமும் அவர்களுக்கு தான் செல்ல போகிறது. ஓலா, ஊபர் போன்றவற்றில் ஒவ்வொரு ரைடுக்கும் ஓட்டுநர்கள் கமிஷனை இந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் பாரத் டாக்ஸி ஜீரோ கமிஷன் மாடலில் செயல்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தனியார் செயலிகளை போல பீக் அவர்கள், மழை காலங்களில் கூடுதல் கட்டணங்களும் இதில் வசூல் செய்யபடாது.
அதாவது டிமாண்டிற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை இதில் இல்லை என்பது வாடிக்கையாளர்களாகிய நமக்கு நல்ல செய்தி. உலகின் முதல் கோ ஆப்பரேட்டிவ் அதாவது ஓட்டுநர்களாலே முழுக்க முழுக்க இயக்கப்படக்கூடிய ஒரு டாக்ஸி சேவை இது என கூறுகிறது மத்திய அரசு. டெல்லியில் இந்த செயலியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித் ஷா, இதில் இதில் ஓட்டுநரே உரிமையாளர் என கூறினார்.

சகாக்கர் டாக்ஸி கோ ஆப்பரேட்டிவ் லிமிடெட் நிறுவனம் இந்த செயலை உருவாக்கி செயல்படுத்துகிறது. வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனத்தை இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பைக் தீதி என்ற ஒரு புதிய சேவையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதுவரை 150 பெண் ஓட்டுநர்கள் இதில் தங்களுடைய வாகனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். எனவே பெண் ஓட்டுநர்களுக்கும் வாய்ப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி, குஜராத் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் மூன்று லட்சம் ஓட்டுநர்கள் பாரத் டாக்ஸியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாள்தோறும் 10,000 க்கும் அதிகமான ரைடுகள் புக் செய்யப்பட்டு 6.7 லட்சம் பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை 10 கோடி ரூபாய் வரை ஓட்டுநர்களுக்கு நேரடியாக வருமானமாக சென்றுள்ளது என அரசு கூறுகிறது.
பாரத் டாக்ஸியில் இணைத்து கொள்ளும் ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சேவைகளும் கிடைக்கிறது. அது தவிர இதில் எஸ்ஓஎஸ் பட்டன் இருக்கிறது அதில் ஒரு கிளிக் செய்தால் உள்ளூர் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு எமர்ஜென்சி தகவல் சென்றுவிடும் என்பதால் பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ள தேவையில்லை. தமிழ்நாட்டின் சென்னை, கோவையில் பாரத் டாக்ஸி சேவை கிடைக்கிறது. அதே போல டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications